ர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஹாசனாம்பாதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஹாசனாம்பா கோவில் இருப்பதால்தான் இந்நகரமும் ஹாசன் நகரம் என்றே பெயர் பெற்றிருக்கிறது. மேலும், இக்கோவில் சிறப்புகளையும், தகவல்களையும் கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது.

இக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்காக திறந்து விடப்படுகிறது. நவம்பர் 1-ஆம் தேதியிலிருந்து, நவம்பர் 9-ஆம் தேதிவரை பக்தர்கள் ஹாசனாம்பா அம்மனை தரிசனம் செய்யலாம். அதாவது 10 நாட்களும் இரவு முழுவதும் நடை சாத்தப்படாமல் திறந்தே இருக்கும்.

மன்னர் குடும்பத்தினர் சார்பில், ஹாசனாம்பா கோவிலுக்கு முதலில் சிறப்பு பூஜை செய்யப்படும். அதன்பின்னர், அரசு கருவூலத்தில் உள்ள நகைகள் பாதுகாப்பாக எடுத்து வந்து, ஹாசனாம்பா சிலைக்கு அணிவிக்கப்படும்.

ஹாசனாம்பா கோவில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில் கோவிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாழக்கிழமை கோவில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்குமாம்.

ஹாசனாம்பா கோவில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்குமென்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோவில் திறக்கப்படும் நாளில் அம்மனை காண வருகிறார்கள்.

ஒருமுறை நான்கு திருடர்கள் அம்மன் ஆபரணங்களை திருடிச்செல்ல ஹாசனாம்பா கோவிலுக்கு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாகி போகுமாறு சபித்ததாக சொல்லப்படுகிறது.

அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோவிலாக “திருடர்கள் கோவில்” என்ற பெயரில் இந்த கோவிலின் வளாகத்தில் அமைந்திருக்கிறது.

இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணப்பா நாயக்க பாளையக்காரனின் காலத்தில் கட்டப்பட்டது.

சப்த கன்னியர்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் வாரணாசியில் இருந்து தெற்கு பகுதிக்கு புத்துணர்வுக்காக வலம் வந்தார்கள் என்றும், அந்த சப்த கன்னியர்களில் வைஷ்ணவி, கவுமாரி, மகேஸ்வரி அம்மன்கள் ஹாசனாம்பா கோவிலில் மண்புற்றின் வடிவத்தில் நிலைத்தார்கள் என்றும், பிராம்மி கெஞ்சம்மனின் புதுக்கோட்டையில் நிலைக்கொண்டிருக்கிறார் என்றும், சாமுண்டி, வராகி, இந்திராணி ஹாசன் நகரில் உள்ள தேவி கோவிலில் நிலைகொண்டு இருப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அரசியல்வாதிகளும், முக்கிய பிரமுகர்களும் இங்கு வந்து ஹாசனாம்பாவை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்த கோவிலுக்கு சென்று வழிப்பட்டால் ஆண்டு முழுவதும் நம்மை தீய சக்திகள் நெருங்காது என்று நம்பப்படுகிறது.