இந்திய அரசு பெகாசஸை வாங்கியதா? தனது சொந்த மக்களுக்கு எதிராக பெகாசஸ் ஆயுதத்தைப் பயன்படுத்தியதா? ராகுல் சரமாரி கேள்வி…

Must read

டெல்லி: இந்திய அரசு பெகாசஸை வாங்கியதா? தனது சொந்த மக்களுக்கு எதிராக பெகாசஸ் ஆயுதத்தைப் பயன்படுத்தியதா?  சரி அல்லமது தவறு என பதில் கூறுங்கள் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி சரமாரியாக கேள்வி விடுத்தார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், பெகாசஸ் டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக அமளிதுமளிப்படுகிறது. இதனால், இரு அவைகளும் எதிர்க்கட்சிகளால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முடக்கப்பட்டு உள்ளன. இடையிடையே மத்தியஅரசு சில மசோதாக்களையும் தாக்கல் செய்து, விவாதமின்றி, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி வருகிறது.

இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற கூட்டம் கூடியதும், பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. ஆனால்,  மத்தியஅரசு, அதுகுறித்து விவாதிக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்து விட்டது. இதையடுத்து பாராளுமன்ற அவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் அவை ஒத்திவைக்கப்பட்டதும் வெளியேறினர்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்த ராகுல்காந்தி ஆவேசமாக மத்தியஅரசுக்கு பல்வேறு கேள்விக்கணைகளை வீசினார்.

சபையில் பெகாசஸ் குறித்து எந்த விவாதமும் நடைபெறாது என்று அரசாங்கத்தால் எங்களுக்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது: ஆனால், நாங்கள் ஒரு கேள்வியை மட்டுமே கேட்க விரும்புகிறோம். இந்திய அரசு பெகாசஸை வாங்கியதா? ஆம் அல்லது இல்லையா? என்பது குறித்து பதில் அளியுங்கள்.

மத்திய அரசு தனது சொந்த மக்களுக்கு எதிராக பெகாசஸ் ஆயுதத்தைப் பயன்படுத்தியதா? என்பதை விள்கக வேண்டும்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

மேலும்,  நாட்டின் இளைஞர்களிடமிருந்து நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் – நரேந்திர மோடி ஜி உங்கள் தொலைபேசியில் ஒரு ஆயுதத்தை அனுப்பியுள்ளார். இந்த ஆயுதம் எனக்கு எதிராக, உச்ச நீதிமன்றம், பல தலைவர்கள், பத்திரிகைகளில் உள்ளவர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது பயன்படுத்தப்பட்டுள்ளது. அது ஏன் சபையில் விவாதிக்கப்படக்கூடாது?

பாராளுமன்ற நடவடிக்கைகளை நாங்கள் தொந்தரவு செய்கிறோம் என்று எங்களைப் பற்றி கூறப்படுகிறது.

நாங்கள் சபையைத் தொந்தரவு செய்யவில்லை. நாங்கள் எங்கள் கடமைகளை நிறைவேற்ற விரும்புகிறோம்.

இந்த ஆயுதம் (பெகாசஸ்) இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது பயங்கரவாதிகள் மற்றும் தேசவிரோதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டும்;

ஆனால், நாட்டு மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பிரதமர்  நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரிடமிருந்து நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்

– இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களுக்கு எதிராக இந்த ஆயுதத்தை (பெகாசஸ் ஸ்பைவேர்) ஏன் பயன்படுத்தினீர்கள்?

எங்களைப் பொறுத்தவரை, பெகாசஸ் என்பது தேசியவாதம் மற்றும் தேசத்துரோகம் தொடர்பான விஷயம்.

இந்த ஆயுதம் ஜனநாயகத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது.

என்னைப் பொறுத்தவரை இது தனியுரிமைக்கான விஷயம் அல்ல. நான் அதை தேச விரோத செயலாகவே பார்க்கிறேன்.

நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஜி ஆகியோர் இந்தியாவின் ஜனநாயகத்தின் ஆன்மாவைத் தாக்கியுள்ளனர்.

இவ்வாறு ராகுல்காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

More articles

Latest article