டெல்லி:

காந்தியை விட மோடி பெரிய பிராண்ட் என்று விமர்சனம் செய்ததை பாஜ அமைச்சர் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.

மத்திய காதி மற்றும் கிராம தொழிற்சாலைகள் ஆணையத்தின் 2017ம் ஆண்டு காலண்டர் மற்றும் டைரியில் கதர் ராட்டை சுழற்றும் மகாத்மா காந்தியின் புகைப்படத்துக்கு பதிலாக பிரதமர் மோடியின் புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்கட்சிகள் மட்டுமின்றி சமூக வளை தளங்களிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு வக்காலத்து வாங்கும் வகையில் மகாத்மா காந்தியை தரம் தாழ்த்தி ஹரியானா மாநில பாஜ அமைச்சர் அனில் விஜி கருத்து தெரிவித்திருந்தார்.

மகாத்மா காந்தியை விட நரேந்திரமோடி பெரிய பிராண்ட். காதி என்பது காந்திக்கு மட்டும் காப்புரிமை பெற்றது கிடையாது. மோடி ஆட்சியில் காதி பொருள் விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. காலண்டர், டைரியில் மோடி புகைப்படம் வெளியிடப்பட்டது நல்ல விஷயம். காந்தி படம் உள்ள ரூபாய் நோட்டுக்கள் செல்லாது அறிவிக்கப்பட்ட நாளே இதற்கு ஆரம்பகட்டம். இதன் பின்னர் படிப்படியாக காந்தி படம் ரூபாய் நோட்டுக்களில் இருந்து அகற்றப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

இவரது கருத்துக்கு பலத்த கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து இந்த கருத்து எனது சொந்த கருத்து. அதை நான் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். யாருடைய மனதையும் நான் புண்படுத்த விரும்பவில்லை என அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எனினும், மோடி படம் வெளியானது குறித்த சர்ச்சை தேவையற்றது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காதி ஆணைய காலண்டர், டைரியில் காந்தி படம் தான் போட வேண்டும் என்று விதியோ, கலாச்சாரமோ இல்லை எனவும் தெரிவித்துள்ளது.