ஹரியானா புயல் என்று அன்புடன் கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான நாள் இன்று.

kapil

1978-ஆம் ஆண்டு இந்த ஹரியானா புதல் முதன் முதலாக பாகிஸ்தான் மண்ணில் உள்ள ஃபைசாலாபாத்தில் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. அதற்கு முன்பாகவே குயேட்டாவில் நடந்த இரு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒவ்வொன்றிலும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். ஃபைசாலாபாத்தில் கபில் ஆடிய முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது.
கபில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் வீசிய முதல் பந்து ஒரு நோ-பால் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். ஆரம்பம் ஒரு நோ-பாலாக இருந்தாலும் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக தனது வரலாற்றை அவர் எழுதிமுடித்து விடைபெற்றது நாம் அனைவரும் அறிந்ததே!
1980களில் கிரிக்கெட் ரசிகர்களின் இதயதுடிப்பாக திகழ்ந்த கபில் ரிச்சர்ட் ஹாட்லி மற்றும் இயன் போத்தம் ஆகியோருக்கு இணையான இடத்தில் வைத்து கிரிக்கெட் ரசிகர்களால் போற்றப்படுகிறார். அவரது பல சாதனைகளுள் முக்கியமானதொன்று அறிமுகமான ஐந்தாவது ஆண்டிலேயே அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று இந்தியாவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் உலகக் கோப்பையை பெற்றுத்தந்ததாகும். 1983-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் பலம் மிக்க வெஸ்ட் இண்டீஸ் அணியை அணியை வீழ்த்தி இந்தியாவுக்கு உலகக்கோப்பையை பெற்றுத்தந்த தன்னிகரற்ற கேப்டன் இவர்.
கபில் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் ரிச்சர்ட் ஹாட்லியின் 431 விக்கெட் சாதனையை முறியடித்து 434 விக்கெட்டுகளுடனும் 5248 ரன்களுடனும் ஓய்வு பெற்றார். தனது ஓய்வுக்கு ஐந்து ஆண்டுகலுக்கு பின்னர் கபில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளாராக பொறுப்பேற்றார். ஆனால் முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் சாட்டிய மேட்ச்-பிக்சிங் குற்றச்சாட்டு காரணமாக ஒரே ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதற்குப் பின்னர் அவர் இந்தியாவின் பவுலிங் பயிற்சியாளராகவும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். கிரிக்கெட் போட்டிகளில் வர்ணணையாளராகவும் விவாத மேடைகளில் பங்கேற்பாளராகவும் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். கபில் இந்திய கிரிக்கெட்டின் ஒரு பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது