லண்டன்: அரச குடும்பத்திலிருந்து முறைப்படி விலகி, தற்போது அமெரிக்காவில் தனியாக வசித்துவரும், மறைந்த இளவரசர் பிலிப்பின் சொந்த பேரனும், பட்டத்து இளவரசர் சார்லஸின் இரண்டாவது மகனும், இளவரசர் வில்லியமின் உடன்பிறந்த தம்பியுமான ஹாரி, பிலிப்பின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரிட்டனுக்கு வந்துள்ளார்.

பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து, கருத்து வேறுபாடு காரணமாக விலகினர் ஹாரி – மேகன் தம்பதியினர். அவர்கள், ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியும் சர்ச்சையானது.

இந்நிலையில், மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதி ஊர்வலத்துக்கு பிரிட்டன் அரசு பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருக்கும் நிலையில், இந்த ஊர்வலத்தில் பங்கேற்க தற்போது விமானம் மூலமாக அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு ஹாரி வந்துள்ளார்.

கொரோனா தாக்கம் காரணமாக, ஹாரி தனிமைப்படுத்தப்பட்டாலும், இறுதி ஊர்வலத்தில் அவர் கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், அவரின் மனைவி கர்ப்பமாக இருப்பதால், பிரிட்டன் வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.