மெல்போர்ன்

மியான்மர் ராணுவத்துடன் வர்த்தக தொடர்பு உள்ளதால் எஸ் அண்ட் பி நிறுவனம் தனது பட்டியலில் இருந்து அதானி நிறுவன துறைமுகங்களை நீக்கி உள்ளது.

மியான்மரில் தற்போது ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.  அதிபர் ஆங் சான் சூகி உள்ளிட்ட பல அமைச்சர்களை ராணுவம் கைது செய்து காவலில் வைத்துள்ளது.    இதை எதிர்க்கும் மக்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொன்று வருகிறது.   கடந்த பிப்ரவரி 1 முதல் 700க்கும் மேற்பட்டோர் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் பிரபல துறைமுக கட்டுமானம் மற்றும் பராமரிக்கும் நிறுவனமான அதானி நிறுவனம் மியான்மரில் துறைமுகப் பணிகளைச் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  சுமார் 29 கோடி டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தை மியான்மர் ராணுவம் அதானி நிறுவனத்துக்கு அளித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான எஸ் அண்ட் பி டோ ஜோன்ஸ் நிறுவனம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.   இது மனித உரிமைகளை மீறிய மியான்மர் ராணுவத்துக்கு அதானி நிறுவனம் ஆதரவு அளிப்பதைக் காட்டுவதாக இந்நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது.

தனது துறைமுக பட்டியல்களில் இருந்து அதானி நிறுவனம் பராமரிக்கும் துறைமுகங்களை நிறுவனம் நீக்கி உள்ளது.  இந்த நீக்கம் வரும் வியாழன் அதாவது ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வர உள்ளது என நிறுவனத்தின் நேற்றைய அறிக்கை தெரிவித்துள்ளது.