மதுரை: மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதியாக 23ம் தேதி ஹரிஹர தேசிகர் பட்டமேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாபதியாக இருப்பார் என்றும், அன்றைய தினமே மறைந்த ஆதீனத்திற்கு குருபூஜை விழா நடைபெறும் என மதுரை ஆதீன மடத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 13ந்தேதி காலமானார். இதையடுத்து அடுத்த ஆதீனம் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக இருந்த ஹரிஹர தேசிகரை நியமிப்பதற்கான பணிகளை தருமபுர ஆதீனம் மேற்கொண்டு வந்தார். அதைத்தொடர்ந்து, ஹரிஹர தேசிகருக்கு தீட்ஷை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தருமபுர ஆதீனம் அவருக்கு தீட்சை வழங்கினார்.
இதற்கிடையில் நித்தியானந்தா, தான் மதுரை ஆதின மடத்தில் 293 சன்னிதானமாக பதவி ஏற்றுவிட்டதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், 293-வது ஆதீன நியமனத்திற்கான சம்பராதாயங்கள் முடிவுற்ற நிலையில், 10நாட்கள் தொடர்ந்து குருபூஜை நடத்தப்பட்ட பின்னர் பீடோகரனம் என்னும் பீடத்தில் அமரும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதற்காக சீல் வைக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் அறை ஹரிஹர தேசிகர் முன்னிலையில் திறக்கப்பட்டது. மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான சொத்து விவரங்கள், நகை விவரங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, வரும் 23ந்தேதி மதுரை ஆதீன மடத்தின் 293 மடாதிபதியாக ஹரிஹர தேசிகரை, பீடோகரனம் என்னும் பீடத்தில் அமரும் நிகழ்வு நடைபெறவுள்ளது.