இந்தியாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, தற்போது 1 மாதத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால், இந்த நாட்டில் அன்றாடம் காய்ச்சிகளாக இருக்கும் பல கோடிக்கணக்கான மக்களுக்கு முறையான நிவாரணம் அளிப்பதில், சிறிதளவேனும் கவலைப்படுகிறதா மோடியின் மத்திய அரசு? என்ற குரல்கள் எங்கெங்கிலும் ஒலிக்கத் துவங்கியுள்ளன.

சீனாவில் கொரோனா ஆட்டம் போடத் தொடங்கி, 3 மாதங்கள் கடந்த பின்னரும், இந்திய அரசு எந்தவகையிலும் சுதாரிக்காமல்தான் இருந்தது. ஒரு இக்கட்டான நேரத்தில், அமெரிக்க அதிபரை இந்தியாவிற்கு வரவழைத்து, இந்தியாவிற்கு ஒரு புண்ணியமும் இல்லாமல், ஆனால், அமெரிக்காவிற்கு பெரும் நன்மை அளிக்கக்கூடிய ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு, தனது கையாலாகாத மற்றும் திறமையின்மையை மீண்டும் நிரூபித்தது.

இந்நிலையில், கொரோனா பிரச்சினை பெரிதாக கிளம்பியவுடன், போதிய அவகாசம் எதையும் அளிக்காமல், பலகோடி அடிமட்ட தொழிலாளர்கள் வேறுவேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்து, அன்றாட உணவுக்காக அல்லாடி வரும் நிலையில், அவர்களுக்கான எந்த முன்னேற்பாட்டையும் அறிவிக்காமல், உடனே முழு ஊரடங்கை அறிவித்தது.

பலகோடி அடித்தட்டு மக்களின் அன்றாடப் பிழைப்பை பற்றி கவலைப்படாமல், திடீரென ஓரிரவில் பணமதிப்பிழப்பு என்னும் பொருளாதார பேரழிவு நடவடிக்கையை சற்றும் மனிதாபிமானமின்றி அறிவித்தவர்களுக்கு, இதெல்லாம் ஒரு விஷயமா? என்ற முனகல் அப்போதே எழுந்தது.

ஆங்காங்கே, உணவு மற்றும் போக்குவரத்து வசதியில்லாமல் சிக்கிக்கொண்ட ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளானது மற்றும் அவர்களின் துயரம் இன்னும் அதிகரித்துக்கொண்டுதான் செல்கிறது. ஆனால், அதைப்பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த பதிலும் இல்லை.

இதையெல்லாம்விட, மாநில அரசுக்கு தேவையான நிதியை ஒதுக்குவதில், அவர்கள் காட்டும் சுணக்கம்தான் பலரையும் உஷ்ணமடைய வைத்துள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகள் வரிச்சலுகையை மிகச் சாதாரணமாக அறிவிப்பவர்கள், ஊரடங்கால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக, மாநில அரசுகள் கேட்கும் சாதாரண தொகையை தருவதற்கு, சற்றும் தயாரில்லாமல் இருக்கிறார்கள்.

இவர்களின் நோக்கம்தான் என்ன? இவர்கள் எதற்காக ஆட்சியில் அமர்ந்துள்ளார்கள்? என்ற கோபக் குரல்கள் எங்கும் கேட்கின்றன. இந்த மோசமான சூழலில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியைக்கூட நிறுத்திவைத்து, கடைகோடி மக்களுக்கு கொஞ்சமேனும் செல்லக்கூடிய விஷயங்களை தடுத்துவிட்ட இந்த அரசாங்கம், நாட்டில் பரவலான கொரோனா சோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அமெரிக்க அரசின் மிரட்டல்களுக்குப் பயந்து சேவகம் செய்துகொண்டு, சொந்த நாட்டு மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறதா? என்று கொதிக்கிறார்கள் அந்த விமர்சகர்கள்!

ஆனால், அர்த்தமற்ற மற்றும் நகைப்பிற்குரிய நடவடிக்கைகளான விளக்கேற்றுதல் மற்றும் கைத்தட்டல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளுமாறு உருக்கமாக பேசுவதெல்லாம் எந்த ரகத்தில் சேர்த்தி? என தெரியவில்லை என்கின்றனர் அவர்கள்.