சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாமீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படையுங்கள் என தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதி உள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உச்சநீதி மன்றம் வழங்கிய ஜாமின் காரணமாக, வெளியே வந்தார். இதற்கிடையில், அவர் உடல்நலம் பாதிப்பு காரணமாக கடந்த கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி மரணம் அடைந்தார். அதன்பிறகே அவரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்தும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறை தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
இந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை நடத்திய தமிழ்நாடு லஞ்சஒழிப்பு காவல்துறையினர், அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி கோடிகணக்கான மதிப்புள்ள விலை உயர்ந்த புடவைகள், சால்வைகள், செருப்புகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர் பாக சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் வழக்கில், ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட, கிரண் ஜவளி என்ற அரசு வக்கீலை, கர்நாடக அரசு நியமித்தது.
இந்த நிலையில், இந்த மனுமீதான விசாரணையின்போது, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா சார்பில் ஆஜரான வக்கீல் சத்யகுமார், ‘ஜெயலலிதாவின் சொத்துக்களை, அவரது வாரிசான தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்’ என கோரினார். அப்போது, நீதிபதி மோகன், ‘சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் வாரிசுகளுக்கு சேராது’ என்றார். மேலும், ஜெயலலிதாவின் பொருட்கள் கர்நாடக அரசு கருவூலத்தில் இல்லை. ஜெயலலிதாவிடம் இருந்து சில முக்கியமான பொருட்கள் மட்டுமே, பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மீதமுள்ள பொருட்கள் பட்டியலில் மட்டுமே இணைக்கப்பட்டு உள்ளது’ எனவும் நீதிபதி கூறினார்.
இதனால், பறிமுதல் செய்யப்பட்ட உண்மையான சொத்துக்கள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற உள்ளதாக, நரசிம்மமூர்த்தி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் கர்நாடகா அரசு சார்பில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜவாலி கடிதம் எழுதி உள்ளார். அதில், குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தபடி, ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட “விலை மதிப்புடைய கடிகாரம், 11 ஆயிரம் புடவைகள், பரிசு பொருட்கள் உட்பட 28 வகையான பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கர்நாடகா நீதிமன்றத்தில்ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க, வைர நகைகளை தவிர மற்ற எதுவும் இல்லை என்றும், தமிழக லஞ்ச ஒழிப்பு துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையான பொருட்களை ஒப்படைக்குமாறும் அதில் தெரிவித்துள்ளார்.