டில்லி

ங்க நகைகளின் தரத்தை குறிக்கும் ஹால் மார்க் அவசியம் என்னும் மத்திய அரசின் உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

இந்தியா உலக அளவில் தங்கம் அதிக அளவில் விற்கப்படும் நாடாக உள்ளது.  கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் விற்கப்படும் தங்க நகைகளின் தரத்தை கண்காணிக்க ஹால்மார்க் தர முத்திரை செயல்படுத்தப்பட்டது.  ஆனால் இந்தியாவில் உள்ள 4 லட்சத்துக்கும் அதிகமான தங்க விற்பனையாளர்களில் 35,900 பேர் மட்டுமே இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.

அதாவது பெரும்பாலானோர் தர நிர்ணய அங்கீகாரம் பெறாத நகைகளை விற்று வந்தனர்.  இதையொட்டி 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு ஒரு உத்தரவை வெளியிட்டது.  அதன்படி 2021 ஜனவரி மாதம் முதல் தேதி முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது.  ஆயினும் கொரோனா பாதிப்பு காரணமாக இதற்கு நகை விற்பனையாளர்கள் கால அவகாசம் கோரினர்.

அதை ஏற்ற மத்திய அர்சு ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் இந்த விதி அமலாகும் என அறிவித்தது.  அந்த கெடுவை மேலும் அதிகரிக்க விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ஜூன் 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.  அதன் அடிப்படையில் தற்போது தங்க நகைகளுக்கு ஹால்மார்க் அவசியம் என்னும் விதி அமலாக்கப்பட்டுள்ளது.