சென்னை:

டில்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை தமிழக அரசு நியமித்துள்ளது.

ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பொதுச் செயலாளராக அவரது தோழி சசிகலா பொறுப்பேற்றார். முதல்வராகவும் ஆக முயன்ற நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றார். இதையடுத்து  அவர் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.

மேலும் சிறைக்கு செல்லும் முன்பாக தனது அக்காள் மகன் டிடிவி.தினகரனை துணைப் பொதுச்  செயலாளராக நியமித்தார். மேலும், தினகரனை, டில்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக்க சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த  நிலையில் தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.  இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பொதுபணித் துறை அமைச்சராக இருந்தார்.

டில்லி பிரதிநிதியாக தினகரன் நியமிக்கப்படுவார் என்று யூகச் செய்திகள் வெளியான நிலையில், தளவாய்சுந்தரம் நியமிக்கப்பட்டிருப்பது தலைமைச் செயலக வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.