அடுத்த ஆண்டு முதல் ஹஜ் பயண மானியம்  ரத்து : மத்திய அரசுக்கு பரிந்துரை

மும்பை

ரும் 2018 முதல் ஹஜ் பயணத்துக்கு தரும் மானியத்தை ரத்து செய்ய ஒரு பரிந்துரை மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது

இஸ்லாமியர்களின் புனித நகரம் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா.  இங்கு வருடம் தோறும் சுமார் 1,70,000 இஸ்லாமியர்கள் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் பயணம் செய்கிறார்கள்.   இந்த பயணத்தை ”ஹஜ்” என அழைக்கிறார்கள்.   இந்த பயணச் செலவில் ஒரு பகுதியை இந்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது.   உச்ச நீதி மன்றம் கடந்த 2012ஆம் ஆண்டு பிறப்பித்த ஒரு உத்தரவில் ஹஜ் பயணத்துக்கு அளிக்கும் மானியத்தை வரும் 2022ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக குறைக்க வேண்டும் என ஆணை இட்டு இருந்தது.

மத்திய அரசு இந்த ஆணையை அமுல்படுத்த  முன்னாள் செயலாளர் அஃப்சல் அமானுல்லா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.  அந்தக் குழு இந்த ஆணையையும், தற்போது மத்திய அரசு வழங்கும் உதவிகளையும் ஆய்ந்து மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியிடம் ஒரு பரிந்துரையை அளித்துள்ளது.   அந்த பரிந்துரை குறித்து  முக்தார் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ”இஸ்லாமியர்களின் புனிதப் பயணமான ஹஜ் பயணத்துக்காக ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படுகிறது.  இது வெளிப்படையாக பல வசதிகள் ஏற்படுத்தித் தரும் வகையில் அமைய உள்ளது.   பயணம் செல்பவர்களுக்கு உகந்த கொள்கைககள் உடையது.   இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.   இந்த புதிய கொள்கை ஹஜ் பயணத்துக்கு மானியம் அளிப்பதை ரத்து செய்ய உள்ளது.   இதனால் மிச்சமாகும் தொகை இஸ்லாமிய மக்களின் கல்வி மற்றும் பல நலத்திட்டங்களுக்கு உபயோகப் படுத்தப்படும்” என தெரிவித்தார்.

பரிந்துரை அறிக்கையின் அடிப்படியைல் ஏற்பட்டுள்ள புனித கொள்கையின் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு :

1.       ஹஜ் பயணம் மேற்கொள்ள கப்பல் வழி பயணம் பரிந்துரை செய்யப்படுகிறது.  கப்பலில் பயணம் செய்வதன் மூலம் விமானக் கட்டணத்தை விடக் குறைவான கட்டணமே செலவாகும்    சவுதி அரேபியா அரசுடன் கப்பலில் பயணம் செய்ய விரும்புவர்கள் பேசி முடிவு செய்துக் கொள்ளலாம்.

2.       தற்போது ஹஜ் பயணிகளுக்கான புறப்பாட்டு மையங்களாக உள்ள 21 விமான நிலையங்கள் 9 ஆக குறைக்கப்படும்.  டில்லி, லக்னோ, கொல்கத்தா, அகமதாபாத், மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி ஆகிய 9 நகரங்களில் இருந்து இனி விமானப் பயணம் மேற்கொள்ள முடியும்.

3.       புனித ஹஜ் பயணத்துக்கான புதிய கொள்கையின் படி இனி இந்திய அரசின் ஹஜ் குழு மூலமும், தனியார் மூலமும் பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.  இது 70:30 என்னும் விகிதத்தில் அமையும்.   இதனால் வெளிப்படைத் தன்மை புலப்படும்..

4.       இந்த புதிய கொள்கையின் பரிந்துரையை சிறுபான்மையினர் அமைச்சகம் மேலும் ஆராய்ந்துக் கொண்டு உள்ளது.   மேலும் திருத்தங்கள் தேவைப்பட்டால் அவையும் சேர்க்கப்பட்டு வரும் 2018 முதல் அமுல்படுத்தப்படும்.

இவ்வாறு அந்த பரிந்துரை பற்றி அமைச்சர் தெரிவித்தார்.
English Summary
Haj subsidy will be suspended from 2018