டில்லி
இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் தற்போது மோசமான பொருளாதார நிலையில் உள்ளதாக அதன் தொழிற்சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட் (எச் ஏ எல்) மிகவும் லாபத்தில் இயங்குவதாகவும் அரசு அந்த நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி கொள்முதல் உத்தரவு அளித்துள்ளதாகவும் பாராளுமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் அந்த நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பணம் இல்லாததால் ரூ.1000 கோடி நிதி அளிக்க நிர்வாகம் கோரிக்கை விடுத்தது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவர் சூர்யதேவ் சந்திரசேகர், “தற்போது நிறுவனம் மோசமான நிலையில் உள்ளது. ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் பணம் இல்லாமல் நிதி நெருக்கடியில் நிறுவனத்தின் பொருளாதார நிலை உள்ளது. அரசிடம் இருந்து ரூ. 15000 கோடி நிறுவனத்துக்கு பாக்கி உள்ளது.
கடந்த 2 மாதங்களாகவே நிறுவனத்தில் பொருளாதார நெருக்கடி உள்ளது. இந்த மாதம் ஊழியர்களின் ஊதியத்துக்கு வங்கியில் இருந்து பணம் பெற முடியாத நிலை ஏற்பட்டதால் ஊதியம் ஒரு நாள் தாமதமாக வழங்கப்பட்டது. தற்போது உடனடியாக நிறுவனத்துக்கு ரூ.900 கோடி தேவைப்படுகிறது. இந்த மாதம் வங்கியில் இருந்து ஓவர் டிராஃப்ட் பெறப்பட்டது.
இதே நிலை ஒவ்வொரு மாதமும் நீடிக்கும் என அஞ்சப்படுவதால் அரசு பாக்கி வைத்துள்ள தொகையை உடனடியாக அளிக்க வேண்டும். இது குறித்து அதிகாரிகள் அமைச்சரவைய தொடர்பு கொண்டு வருகின்றனர். எங்களுடைய முக்கிய வாடிக்கையாளர் இந்திய அரசின் விமானப் படை என்பதால் அவர்கள் பாக்கித் தொகையை உடனடியாக அளிக்க வேண்டும்.
இவை அனைத்தும் பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவர் உடனடியாக இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அது மட்டுமின்றி அரசு இதன் பங்கு தாரர் என்பதால் இந்த நிறுவனத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் அரசு நிதி உதவி உடனடியாக வழங்க வேண்டும்.
அனைத்து நிறுவனங்களிலும் செய்தது போல் எங்கள் நிறுவனத்திலும் அரசு தனது பங்குகளை திரும்பப் பெற்றதும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ஆகும். அத்துடன் எங்களது முக்கிய வாடிக்கையாளரான இந்திய அரசின் விமானப்படை பாக்கித் தொகையை நீண்ட நாட்களாக நிறுத்தி வைத்துள்ளதும் இன்னொரு காரணம் ஆகும்.
அரசு அறிவித்தபடி ரூ.1 லட்சம் கோடிக்கான உத்தரவு எதுவும் எங்களுக்கு வரவில்லை. ரூ.26000 கோடிக்கான உத்தரவு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மற்றவைகளுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. அவை அனைத்தும் வெறும் தீர்மான அளவில் உள்ளன. இது குறித்த எதிர்க்கட்சிகளின் கருத்து பற்றி நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.
நாங்கள் எந்தக் கட்சியையும் சாராத தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள். இந்த நிறுவனத்தை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. தற்போதைய நிலையில் இந்த நிறுவனத்தின் நற்பெயர் கெடும் நிலையில் உள்ளதால் நிறுவனத்தின் எதிர்காலம் பாதிக்கப்படும். விரைவில் நாங்கள் இந்த நிலையில் இருந்து மீண்டு வருவோம் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.