ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ‘ஜிப்ஸி’.
இப்படம் நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி உள்ளது.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டனர். இதனால் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டு அங்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் , உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை கேலி செய்வது போன்ற காட்சிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது .
இந்தப் படத்துக்கான விளம்பரப் பாடலில், நல்லகண்ணு, பியூஸ் மானுஷ், திருமுருகன் காந்தி, பாலபாரதி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் நடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கெளதமி தலைமையிலான தணிக்கைக்குழுவினர் படம் பார்த்தனர். ‘பல காட்சிகளை நீக்க வேண்டியதிருக்கும். அப்படி நீக்கினால் படத்தின் கதையையே மாற்ற வேண்டியதிருக்கும்’ என்று அவர்கள் சொன்னதோடு, ‘நீங்கள் TRIBUNAL-க்குச் சென்றுவிடுங்கள்’ எனத் தெரிவித்தனர்.
ஆனால், TRIBUNAL சென்றால் பட வெளியீட்டுக்கு 3 மாதங்களாகும். நீக்கம் செய்யப்பட பரிந்துரைத்த காட்சிகளை தணிக்கைக் குழுவிடம் இருந்து வாங்கி, படத்தின் கதைக்களம் மாறாத வகையில் கதாபாத்திரங்களின் பெயரை மாற்றலாம், எப்படி காட்சிகளை மாற்றி அமைக்கலாம் என்று படக்குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
இறுதியில் தணிக்கைக்குத் தகுந்தாற் போல் சில காட்சிகளை நீக்கி, தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். அப்போது ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது தணிக்கைக் குழு. ஜனவரி 24-ம் தேதி ‘ஜிப்ஸி’ வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.