சென்னை,
குட்கா விவகாரம் குறித்து அப்போதைய டி.ஜி.பி ராஜேந்திரன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய ரகசியக் கடிதம் சசிகலா அறையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் குட்கா விவகாரம் குறித்தும், அந்த ஊழலில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, மத்திய அரசின் கலால்துறைக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதைத்தொடர்ந்து கலால் துறை, டில்லியிலிருந்து சட்ட விரோதமாக குட்கா தமிழகம் கொண்டு வரப்பட்டு திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது என்றும், ஹவாலா முறையில் இதற்கான பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது என்றும், சுமார் ரூ.55 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் கூறியிருந்தது.
இந்த வழக்கில் எதிர் மனுதாரரான வருமானவரித் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், குட்கா ஊழல் சம்பந்தமாக கடந்த 2016-இல் செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த குடோனின் உரிமையாளர்களாக மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் ஆகியோர் உள்ளனர் என்றும், அவர்கள் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்காவை, தடையை மீறி விற்பனை செய்வதற்காக கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்தது ரெய்டின்போது தெரிய வந்தது என்றும், இந்த ஊழலில், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் குறித்த ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்பட்டது.
அதைத்தொடர்ந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை டிஜிபிக்கு ரகசியக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது என்றும் கூறியிருந்தது.
இதையடுத்து குட்கா ஊழல் தொடர்பாக அப்போதைய டிஜிபி ராஜேந்திரன், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரகசியக் கடிதம் எழுதியதாக கூறப்பட்டது.
இந்த கடிதம் கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் போயஸ் தோட்டத்தில் நடைபெற்ற அதிரடி சோதனை யின்போது, அங்குள்ள சசிகலா அறையில் அந்த ரைகசியக் கடிதம் கைப்பற்றப்பட்டது. என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் நேற்றைய விசாரணை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் வந்தது. ஆனால், வழக்கை வரும் ஜன.17-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.