மதுரை:

குட்கா, பான்மசாலா விற்க நிரந்தர வருடந்தோறும் தடை விதிக்கப்படுவதை தவிர்த்து நிரந்தர தடை விதிப்பது குறித்து பதில் அளிக்க மதுரை உயர்நீதி மன்றம்  உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் குட்கா, பான்மசலா மற்றும் புகையிலை பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படும் என முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013ம் வருடம் ஏப்ரல் மாதம் 8–ந் தேதி சட்டசபையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து குட்கா பான் மசாலா தடை தொடர்பாக ஆண்டுதோறும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  மதுரையைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பவர்,குட்கா, பான் மசாலா புகை யிலை பொருட்களுக்கு ஆண்டுதோறும்  தடையை நீட்டித்து  அரசாணை வெளியிடுவதற்கு பதில், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுமீதான விசாரணை  நீதிபதிகள் கிருபாகரன்,  சுந்தர் அமர்வு முன்வு விசாரிக்கப்பட்டது. அப்போது,  குட்கா, பான்மசாலா போன்றவற்றிற்கு நிரந்தரமாக தடை விதிக்காமல், ஒவ்வொரு ஆண்டும் தடையை நீட்டித்து அரசாணை வெளியிடுவது ஏன்? என  அரசு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்த தமிழக தலைமை செயலர்,  தமிழக சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கு  23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.