புதுடெல்லியை ஒட்டியுள்ள ஹரியானா மாநிலத்தின் குருகிராம் (குர்கோன்) நகரில் உள்ள 8 மசூதிகளில் தொழுகை நடத்த நகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

இதனை அடுத்து, சதர் பஜார் பகுதியில் உள்ள சீக்கிய வழிபாட்டு தலமான குருத்வாராவில் வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக்கொள்ள குருத்வாரா நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

மசூதி மற்றும் திறந்தவெளிகளில் தொழுகை நடத்துவதற்கு நகராட்சி நிர்வாகத்தின் அனுமதி அவசியம் என்ற நிலையில், இந்த பகுதியில் உள்ள மசூதிகள் இங்குள்ள மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் தொல்லையாக இருப்பதாகக் கூறி இங்கு தொழுகை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கடந்த மாதம் கோரிக்கை வைத்தனர்.

இதனால், குருகிராமில் உள்ள மொத்தம் 37 மசூதிகளில் 8 மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது, இந்த நிலையில் இந்தப்பகுதியில் வசிக்கும் சிலர் காலியாக இருக்கும் தங்களுக்குச் சொந்தமான இடங்களில் தொழுகை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கினர்.

தற்போது, சீக்கியர்களின் குருத்வாராவிலும் தொழுகை நடத்த அனுமதி அளித்திருக்கிறது, கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் சமூக இடைவெளியுடன் சிறு சிறு குழுக்களாக வந்து தொழுகை நடத்திக்கொள்ள அனுமதி அளித்திருப்பதாக அதன் நிர்வாகி தெரிவித்திருந்தார்.