குரு பரிகார ஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் இன்று அதிகாலை குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குரு பெயர்ச்சி விசேஷ பூஜைகளில் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.
நவக்கிரங்களில் சுப கிரகம் என அழைக்கப்படும்,நற்பலன்களை தரகூடிய கிரகமான குரு பகவான் ஆண்டுதோறும் ஒரு ராசியில் மற்றொரு ராசிக்கு இடம்பெயர்ச்சி ஆவது குரு பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நவக்கிரங்களில் குருபரிகார தலமாக விளங்கும் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேசு வரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இன்று அதிகாலை 3 மணி 49 நிமிட அளவில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்தார்.
குருபகவான் சன்னதி தரிசனம் பார்த்தல் கோடி புண்ணியம் என்பதற்கிணங்க ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் குரு மூர்த்திக்கு, குருபெயர்ச்சியை முன்னிட்டு கடந்த சில நாட்களாக லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று அதிகாலை 3 மணிக்கு குருப் பெயர்ச்சியை முன்னிட்டு, கோவிலில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து குருவுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காத்தில் பூஜை நடைபெற்றது.
இன்று குருபெயர்ச்சியையொட்டி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் நேற்று இரவு முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று காலை குருப்பெயர்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஆலய நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
குருப்பெயர்ச்சி விசேஷ பூஜை – வீடியோ…