ஆலங்குடியில் நாளை குருப்பெயர்ச்சி விழா!

Must read

 

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் - குருபகவான்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் – குருபகவான்

 துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது.
குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது என்பது ஐதிகம்.
நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான குருபகவான் (தட்சிணாமூர்த்தி) ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குடிகொண்டுள்ளார். குரு பகவானுக்கு பரிகார  ஸ்தலமாக ஆலங்குடி  விளங்குகிறது.
தமிழ்நாட்டில் திருவாருர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ளது ஆலங்குடி.  இந்த கோயில் தேவாரப் புகழ் பெற்ற வரலாற்று சிறப்பு உடையது. குரு பரிகார ஸ்தலமாகிய ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது.
பாற்கடல் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் ஆபத்சகாயர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. அத்துடன் இவ்வூருக்கு ஆலங்குடி என்ற பெயரும் ஏற்பட்டது.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்  கோயிலில் சிவ வழிபாடு நீங்கலாக, கிரக நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டி பிருஹஸ்பதி அல்லது குரு பகவானை (வியாழன்) வழிபடவும் மக்கள் வருகின்றனர்.
ஆதிசங்கரர் , குரு மூர்த்தியை தரிசித்து சிவஞானம் பெற்றார்  என்றும், இந்திரன் முதலிய அஸ்டதிக்கு பாலகர்கள் இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும்,  சிவலிங்கமும் நிறுவி பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்க பேறு பெற்றார்கள் என்றும் இதிகாச நூல்கள் கூறுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியில் மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.
குரு பகவான் நாளை காலை 9.30 மணிக்கு, சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் மாறுகிறார். இதை முன்னிட்டு விசேச பூஜைகள், ஹோமங்கள் நடைபெறுகிறது.
இந்த விசேச பூஜையில் கலந்ததுகொள்ள இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் ஆலங்குடி நோக்கி வருவார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குரு இடப்பெயர்ச்சி பூஜையில் கலந்துகொள்வது வழக்கம்.
குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம்  வந்தும், 24 நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம்.
முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல்,  கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன், கேஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல  தோஷங்களும் நிவர்த்தியாகி  குரு பகவான் அருள் பெறுவர்.
வாரந்தோறும் வியாழக்கிழமை, தினசரி வரும் குரு ஹோரை மற்றும் புனர்பூசம், விசாகம்,  பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் குரு பகவானை வழிபடுதல் சிறந்தது.
திருமணம், புத்திரபாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வணங்குவதற்கு திருச்செந்தூர் செல்வது சிறப்பைத் தரும்.
தொழில் உத்தியோக விருத்திக்கு செங்கோட்டை அருகில் புளியரை என்ற ஸ்தலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
குரு பெயர்ச்சி விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசின் அறநிலையத் துறை செய்து வருகிறது. சென்னை மற்றும் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் இருந்து விசேச பேருந்து வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

More articles

Latest article