ஸ்ரீநகர்,

ம்மு காஷ்மீரில் 11 மணி நேரம் நடைபெற்ற  துப்பாக்கிச் சண்டைக்குப் பின் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் வன்முறை காரணமாக 3 பேர் பலியாகினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், எல்லை பாதுகாப்பு படை யினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

இந்நிலையில் பயங்கரவாதிக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் எல்லை பாதுகாப்பு படையினரை எதிர்த்து கல்வீச்சில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி,  புட்காமில் பதுங்கியிருந்த பயங்கரவாதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற இந்த தொடர் துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

அதே நேரத்தில், பயங்கரவாதிக்கு ஆதரவாக,  ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய இளைஞர்களில் மூன்று பேர் ராணுவத்தினரின் தாக்குதலில் மரணமடைந்தனர். மேலும், 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொதுமக்கள்  கல்வீசி தாக்கியதில் 60க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரும், 20 போலீசாரும் படுகாயம் அடைந்தனர்.

இதன் காரணமாக காஷ்மீரின் பல பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. ஸ்ரீநகரில் ஜெஹாங்கிர் சதுக்கத்தில் வன்முறை வெடித்தது. இதனால் அப்பகுதியில் அச்சமும் பீதியும் பரவியது.

இதன் காரணமாக காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி, பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் சண்டையில் ஈடுபடும் போது, பொதுமக்கள் யாரும் குறுக்கே வர வேண்டாம், விலகியே இருங்கள் என்றும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.