நொய்டா,

டில்லி அருகே உள்ள தொழிற்நகரமான நொய்டாவில் இந்திய கொடியை அவமதித்த சீன அதிகாரிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவை சேர்ந்த ஓப்போ நிறுவனம் ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரித்து சந்தையில்  விற்பனையை மேற்கொண்டுவருகிறது.  இந்நிறுவனத்தின் தொழிற்சாலை நொய்டாவில் உள்ளது. இங்கு பணி புரியும் சீனாவை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர், இந்திய தேசியக் கொடியை கிழித்து, குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார்.

இதை பார்த்த சில ஊழியர்கள் மற்ற ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்தனர். இதன் காரணமாக தொழிலாளர்கள் சீன அதிகாரிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

இந்திய தேசியக் கொடி பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலை முழுவதும் தேசியக் கொடி பதாகைகளை நிறுவிய அவர்கள், கொடியை அவமதித்த அதிகாரியை மன்னிப்பு கேட்க கோரினர்.

இதனால் கம்பெனி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் கம்பெனிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

நடந்த சம்பவத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கம்பெனி அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். ஆனால், போலீசார்  சம்பந்தப்பட்ட அதிகாரி மீது வழக்கு பதிவு செய்தனர்.