கஷ்டபஞ்சன் அனுமன் கோவில். குஜராத்
அனைவரையும் துன்புறுத்தும் சனிபகவான் பெண் உருவம் எடுத்து அனுமனிடம் மன்னிப்பு கேட்டது ஏன் தெரியுமா?
அனைவரும் கண்டு பயப்படும் ஒரு கடவுள் என்றால் அவர் சனிபகவான்தான். ஏனெனில் சனிபகவானின் பார்வை ஒருவரின் பக்கம் திரும்பிவிட்டால் அவர் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்களை அனுபவிப்பார்கள். அதற்குக் காரணம் அவர்களின் கர்மபலன்தான். அனுமனுக்கும், சனிபகவானுக்கும் இருக்கும் நட்பு அனைவரும் அறிந்ததுதான்.
சனிபகவானின் பார்வையில் இருந்து தப்பிக்க ஆஞ்சநேயரை வழிபட வேண்டியது அவசியமாகும். சனிபகவான் உலகம் முழுவதும் இந்து மக்களால் வழிபடப்படும் கடவுளாவர். சனிபகவான் சில இடங்களில் வித்தியாசமான உருவத்தில் வழிபடப்படுகிறார். அதில் முக்கியமானது பெண் உருவத்தில் வழிபடப்படுவதுதான். இந்த பதிவில் சனிபகவான் பெண் உருவில் இருப்பதற்கான காரணம் அந்த கோவில் எங்கு இருக்கிறது என்று பார்க்கலாம்.
அகமதாபாத்தில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் பழங்கால ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது. கஷ்டபஞ்சன் ஹனுமான் என்று அழைக்கப்படும் இந்த கோயில் பல அரிய விஷயங்களுக்குப் புகழ் பெற்றது. அனுமன் துக்கங்களை நசுக்குபவர் என்று நம்பப்படுகிறது, எனவே இதற்கு கஷ்டபஞ்சன் கோவில் என்று பெயர்.
மூலவராக அனுமன்
எந்தவொரு உடல் தொடர்பான நோயாக இருந்தாலும் இந்த கோவிலில் சென்று வழிபட்டால் குணமாகிவிடும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். ஆஞ்சநேயரை மூலவராக வழிபடும் ஒரே சுவாமி நாராயண கோவில் இதுதான். இந்த அனுமனை வழிபட்டால் உங்களைச் சுற்றியிருக்கும் அனைத்து தீயசக்திகளும் விலகிவிடும் என்பது பரவலாக நிலவும் கருத்தாகும். இந்த கோவிலுக்கு செல்வதற்கான சிறந்த நாள் சனிக்கிழமை ஆகும்.
சனிபகவான்
ஆஞ்சநேயரைத் தவிரச் சனிபகவானும் இந்த கோவிலில் முக்கிய கடவுளாக இருக்கிறார். ஆனால் இந்த கோவிலில் சற்று வித்தியாசமான வடிவத்தில் எழுந்தருளியிருக்கிறார். இந்த கோவிலில் பெண் வடிவத்தில் சனிபகவான் வழிபடப்படுகிறார்.
கோவிலின் கதை
புராணங்களின் படி ,சனிபகவானின் கோபத்தால் மக்கள் அதிக இன்னல்களுக்கு ஆளாகத் தொடங்கினர். சனிபகவானின் கோபப்பார்வையை தாங்கிக் கொள்ள முடியாமல் மக்கள் சனிபகவானை வழிபடத் தொடங்கினர். மக்களின் வேண்டுதலை ஏற்று அனுமன் சனிபகவானுக்குப் பாடம் புகட்ட முடிவு செய்தார். இதனை எண்ணி சனிபகவான் கலக்கமுற்றார்.
ஆஞ்சநேயர் தூய பிரம்மச்சாரி என்று சனிபகவான் நன்கு அறிவார். எனவே அவர் பெண்களுக்கு எதிராகச் செயல்பட மாட்டார் என்று அவர் எண்ணினார். அனுமனின் கோபத்தில் இருந்து தப்பிப்பதற்காகச் சனிபகவான் பெண் உருவத்தை எடுத்து ஆஞ்சநேயரிடம் மன்னிப்புக் கோரினார். மேலும் அனுமனை வழிபட்டவர்கள் மீதிருந்து தனது கோபப்பார்வையை திரும்ப பெற்றுக்கொண்டார்.
சனிபகவான் வழிபாடு
அப்போதிலிருந்து இந்த கோவிலில் சனிபகவான் பெண் உருவத்தில் வழிபடப்படுகிறார். இந்த கோவில் பக்தர்களின் துயரங்களைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது. எனவே இது கஷ்டபஞ்சன் அனுமன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் வழிபாடு செய்வது உங்கள் ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் நீக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்களை குறைத்து அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்த கோவிலில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்புப் பூஜை நடத்தப்படுகிறது. இந்த கோவில் இயற்கை எழில் சார்ந்த மிகப்பெரிய இடத்தில் உள்ளது. சனிபகவானின் ஆணவம் அதிகரிக்கும் போதெல்லாம் அதனை அடக்க ஆஞ்சநேயர் வருவார் என்பதன் அடையாளமாக இந்த கோவில் இருக்கிறது.