அகமதாபாத்:

என் மகனை சுட்டுக் கொன்றுவிட்டு, அவனை தீவிரவாதி என்றார்கள். தீவிரவாதியின் தந்தை என்று எனக்கு முத்திரை குத்தினார்கள். அதனால் வேலையை இழந்தேன்…

– குஜராத்தின் முதல்வராக நரேந்திரமோடி இருந்தபோது நடந்த போலி என்கவுன்டரில் தன் மகனை இழந்த தந்தையின் கதறல் தான் இது.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் மோடியின் ஆட்சியின் போது நடந்த போலி என்கவுன்டர்கள் குறித்து விசாரிக்க. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஹெச்.எஸ். பேடி தலைமையில் விசாரணை குழு அமைத்தது.
கடந்த 2002-ம் ஆண்டு நடந்த என்கவுன்டரில் சமீர் பதான் என்பவரும் 2006-ம் ஆண்டு காசிம் ஜாபர் என்பவரும் கொல்லப்பட்டனர். இது போலி என்கவுன்டர் என நீதிபதி பேடி இறுதி செய்தார்.

இந்த விசாரணை குறித்து என்கவுன்டரில் கொல்லப்பட்ட பதானின் தந்தை சர்பராஸ் கான் கூறும்போது, ” அகமதாபாத் மாநகராட்சி போக்குவரத்துத் துறையில் 28 ஆண்டுகள் ஓட்டுநராகப் பணியாற்றினேன். மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளம் பெற்று வந்தேன்.
என் மகன் என்கவுன்டரில் கொல்லப்பட்ட 10 நாட்களுக்குப் பிறகு, என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். ஒருநாள் இரவு முழுவதும் அங்கேயே உட்கார வைத்தனர்.

தொடர்ந்து என்னை பணிக்கு செல்லவிடாமல் போலீஸார் விசாரணை என்று அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். நான் தீவிரவாதியின் தந்தை என்பதால் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனக்கு பென்ஷன் தர மறுத்துவிட்டார்கள்” என்றார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகவும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதி என்று கூறி, சமீர் கான் பதானை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
இதுவும் போலி என்கவுன்டர் என்பதை தனது விசாரணை அறிக்கையில் நீதிபதி பேடி குறிப்பிட்டுள்ளார்.