சென்னை: நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்பாடு துவங்கியுள்ளது.
தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலையின்கீழ் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில், மாநில அரசினுடைய ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் இவை.
ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசித் தேதி ஜுன் 20ம் தேதி மாலை 5 மணி. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரடியாக சென்று சேர்வதற்கான கடைசித் தேதி ஜுன் 21 மாலை 5 மணி.
விண்ணப்பம் செய்வோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 17 வயதுடையவராக அல்லது 17 வயதைப் பூர்த்தி செய்தவராக இருத்தல் அவசியம். மேலும், விண்ணப்பித்தல் தொடர்பான மாணாக்கர்களின் சந்தேகங்களை நிவர்த்திசெய்ய, உதவி மையங்கள், சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் விண்ணப்ப செயல்பாட்டை www.tnhealth.org அல்லது www.tnmedicalselection.org என்ற வலைதளங்களில் மேற்கொள்ளலாம்.