சென்னை:

திமுக பள்ளி நடத்தினால் இரு மொழிக் கொள்கை மட்டுமே இருக்கும் என திமுக எம்பி கனிமொழி கூறினார்.


மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96&வது பிறந்தநாளையொட்டி, திமுக மாநில மகளிர் அணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி பங்கேற்றார்.
அப்போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள நல்வாழ்வு திருமண மண்டபத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, வாழ்நாள் முழுவதும் பெண்கள் முன்னேற்றம் மீது கருணாநிதி அக்கறை கொண்டிருந்தார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற பெரியார் கனவை நிறைவேற்றினார்.

தண்ணீர் தரக்கூட துப்பில்லாத ஆட்சிதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. எந்த ஏரியையும் தூர்வாரவில்லை. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாள் நெருங்கிவிட்டது.

நீட் தேர்வு தொடர்பாக மக்களவையில் திமுக குரல் எழுப்பும். தனியார் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுப்பது குறித்து எதுவும் சொல்ல முடியாது.

திமுக எந்த பள்ளிக்கூடத்தையும் நடத்தவில்லை. திமுக பள்ளிக்கூடம் நடத்தினால் இரு மொழிக் கொள்கைதான் இருக்கும்.

ஒற்றை தலைமை பிரச்சினை உள்கட்சி பிரச்சினை. அதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.