டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ள ரோஸேட் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கிய நபர் சுமார் 2 ஆண்டுகளாக விடுதிக் கட்டணம் செலுத்தாமல் தங்கியது தெரியவந்துள்ளது.
2019 மே 30 ம் தேதி ஹோட்டலில் ரூம் எடுத்த அங்குஷ் தத்தா 2021 ஜனவரி 22 வரை அங்கு தங்கியுள்ளார். மொத்தம் 603 நாட்கள் இங்கு தங்கிய அங்குஷ் தத்தா இதற்கான அறை வாடகை ரூ. 58 லட்சத்தை தராமலே கம்பி நீட்டியுள்ளார்.
மூன்று நாட்களுக்கு மேல் வாடகை தராமல் விருந்தினர்கள் விடுதியில் தங்க மென்பொருள் அனுமதிக்காது என்ற நிலையில் அதன் மென்பொருள் இதற்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் அதை மாற்றியமைக்கும் உரிமை அந்த நட்சத்திர விடுதியின் தலைமை மேலாளர் பிரேம் பிரகாஷ்-க்கு மட்டுமே உள்ளது என்றும் கூறப்படுகிறது.
அங்குஷ் தத்தா-விடம் பணம் பெற்றுக்கொண்டு விடுதிக்கணக்கில் வரவு வைக்காமல் பிரேம் பிரகாஷ் மோசடியில் ஈடுபட்டிருக்க கூடும் என்று அந்த விடுதி நிர்வாகம் சந்தேகமடைந்து.
இதனைத் தொடர்ந்து அங்குஷ் தத்தா மற்றும் பிரேம் பிரகாஷ் ஆகிய இருவர் மீதும் ரோஸேட் உள்ளிட்ட பல்வேறு விடுதிகளை நடத்திவரும் ஃபார்ட் ஏர்போர்ட்ஸ் ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் அதன் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி வினோத் மல்ஹோத்ரா காவல் துறையில் சமீபத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், அங்குஷ் தத்தா என்ற பெயரில் அறை எடுத்து தங்கிய நபர் 603 நாட்களுக்கான அறை வாடகை ரூ. 58 லட்சம் பாக்கி வைத்துள்ளார். 72 மணி நேரம் (3 நாட்கள்) வாடகை இல்லாமல் தங்கினால் அதை ஹோட்டல் தலைமை செயல் அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது ஹோட்டல் நிர்வாகத்தின் விதி.
ஆனால், சி.இ.ஓ.-வுக்கு தெரியப்படுத்தாமல் தனக்கு அளிக்கப்பட்ட உரிமையை பயன்படுத்தி விதிகளை மீறி மென்பொருளில் மாற்றத்தை செய்து குறிப்பிட்ட நபருக்கு 2 ஆண்டுகள் வரை ஹோட்டலில் வாடகை தராமல் தங்க ஹோட்டல் தலைமை மேலாளர் பிரேம் பிரகாஷ் அனுமதி அளித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான ரசீதுகளையும் வழங்கவில்லை, தவிர வேறு சில விருந்தினர்கள் அளித்த வாடகை கட்டணம் அங்குஷ் தத்தா பெயரில் வரவு வைக்கப்பட்டுள்ளது வரவு செலவு தணிக்கையில் தெரியவந்துள்ளது.
தவிர, தணிக்கையில் கண்டுபிடிக்க முடியாத வகையில் பல்வேறு குளறுபடிகள் செய்ததும் தெரியவந்துள்ளது. இதனால் பிரேம் பிரகாஷ் தவிர வேறு ஊழியர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கக்கூடும் என்று தெரிகிறது என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த மோசடி விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.