டெல்லி: ஜூன் மாத மொத்த ஜிஎஸ்டி  வரி வசூல் ரூ.90 ஆயிரத்து 917 கோடி வசூலாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு இப்போது நடைமுறையில் இருக்கிறது. அதன் எதிரொலியாக அனைத்து தொழில்களும் முடங்கி போய் இருக்கின்றன.
அடுத்தடுத்த ஊரடங்கு தளர்வுகளால் தொழில்துறை கொஞ்சம் கொஞ்சமாக மீள தொடங்கின. ஊரடங்கு நாட்களில் ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூல ரூ.32,294 கோடியாகவும், மே மாதம் ரூ.62,009 கோடியாகவும் கிடைத்தது.
இந்நிலையில், ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூலானது கடந்த 2 மாதங்களை காட்டிலும் சற்று உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் ரூ.90,917 கோடி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கடந்த ஆண்டு இதே மாத வசூலுடன் ஒப்பிட்டால் 3வது முறையாக குறைந்துள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதத்தை விட 9 சதவீதம் அளவிற்கான வசூல் குறைந்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல், மே மாதங்கள் முறையே இந்தாண்டு 28, 62 சதவீதம் அளவிற்கு குறைந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஜூன் வரி வசூலில் மத்திய ஜிஎஸ்டியாது ரூ.18 ஆயிரத்து 980 கோடியும், மாநில ஜிஎஸ்டி வரி ரூ.23 ஆயிரத்து 970 கோடியும் இருக்கிறது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.40 ஆயிரத்து 302 கோடியும் வசூலாகி உள்ளது. மாநில அரசுகளுக்கு இழப்பீடாக ரூ.7,665 கோடியும் வழங்கப்பட்டுள்ளது அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.