டில்லி,
டில்லியில் நேற்று நடைபெற்ற அருண்ஜெட்லி தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.
அப்போது மத்தியஅரசு கொண்டுவரும் ஜிஎஸ்டி மசோதாவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறினார்.
நாடு முழுவதும் ஒரே விதமான வரி விகிதத்தை அமல்படுத்த மத்தியஅரசு முயற்சி செய்து வருகிறது.
உற்பத்தி வரி, விற்பனை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற மறைமுக வரியை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. ஏற்கனவே இந்த வரி விதிக முறைக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்து நிலையில் அதில் மேற்கொள்ளப்படும் திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதையடுத்து, ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 11-வது கூட்டம் நேற்று டில்லியில் நடைபெற்றது. அருண் ஜெட்லி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கவுன்சிலில் உறுப்பினராக உள்ள மாநில நிதி மந்திரிகள் கலந்துகொண்டனர்.
ஐ.ஜி.எஸ்.டி, சி.ஜி.எஸ்.டி. ஆகிய வரைவு மசோதாக்களுக்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதாக்களில் வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் வரி செலுத்தும் வழிமுறைகள் பற்றிய அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையின் கீழ் பதிவு செய்வதில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
கூட்டத்தில் பேசிய மாநில நிதி மந்திரிகள், ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் பற்றியும், மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட வேண்டியதன் அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார்கள்.
இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பாக புதிய நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது,
மாநிலங்களின் உரிமைகள் மற்றும் நிதி சுயாட்சி காப்பாற்ற, தமிழ்நாடு எப்போதும் முன்நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தருணத்தில் இந்த குழுமத்தில் வெளிப்படையான மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், விட்டுக்கொடுத்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நாங்கள் எழுப்பிய பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டியது மத்திய, மாநில கூட்டாட்சி முறைக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
முதலாவதாக சில பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் இருந்து நீக்கியது. இரண்டாவதாக நாம் கோரியவாறு, மதுபானம் மற்றும் பெட்ரோலிய பொருட்களை சரக்கு மற்றும் சேவைவரி சட்டத்தில் உட்படுத்தாமல் விலக்கி வைத்தது.
மூன்றாவதாக, மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் பட்சத்தில், அதனை ஈடுசெய்ய உரிய சட்ட வடிவத்தினை அரசியல் சாசன திருத்த சட்டத்திலேயே ஏற்படுத்தி, ஐந்தாண்டு காலத்திற்கு வழங்கிட வழிவகை செய்தது. முக்கியமாக வெளிப்படையான முறையில் வருவாய் இழப்பினை கணக்கிடும் முறையை ஏற்படுத்தி உள்ளது சிறப்பானதாகும்.
நான்காவதாக மிகவும் சிக்கலான மற்றும் பெரும் விவாதத்துக்குள்ளான மத்திய, மாநில அரசு அதிகார பகிர்வினைக்கு செவ்வனே தீர்வு கண்டதாகும்.
இறுதி மற்றும் நிறைவாக மத்திய சரக்கு மற்றும் சேவைவரி சட்டம், மாநில சரக்கு மற்றும் சேவை வரி சட்டம், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவைவரி சட்டம் மற்றும் வருவாய் இழப்பினை ஈடுசெய்யும் சட்டம் ஆகியவற்றை சிறப்பான விவாதங்களின் அடிப்படையில் ஒருமித்த கருத்தினை எட்டி வடிவமைக்கப்பட்டது.
இதுபோன்றே எஞ்சியுள்ள சில பிரச்சினைகளில் தீர்வு காண்போம் என்று நான் திடமாக நம்பு கிறேன். முன்வடிவ சட்டங்களின் மீதான தமிழகத்தின் கருத்துகளை தனியே இக்குழுவிற்கு அனுப்பியுள்ளோம். அதனை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எனினும் மத்திய சரக்கு மற்றும் சேவைவரி சட்டத்தின் பிரிவு 6 மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவைவரி சட்டத்தின் பிரிவு 4 குறித்து சில விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன். இப்பிரிவுகள் இரண்டும் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களின் அதிகார பகிர்வு குறித்ததாகும்.
தற்போது இக்குழுமத்தில் எட்டப்பட்டுள்ள தீர்மானங்களின் அடிப்படையில், ஒரு விகிதாச்சார அடிப்படையில் வணிகர்களை மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கிடையே பிரிக்கப்பட்டு மூன்று சட்டங்களின் கீழ்சமமான அதிகார பகிர்வு ஏற்படுத்த வேண்டும்.
இச்சம அதிகார பகிர்வினை அறிக்கை வடிவில் ஏற்படுத்துவதற்கு பதிலாக சட்டவடிவில் கொண்டுவரப்பட வேண்டும். சரக்கு மற்றும் சேவைவரியை அமல்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பினை தமிழகம் தொடர்ந்து நல்கும் என்று நான் மீண்டும் இந்த குழுமத்துக்கு உறுதி கூறுகிறேன்.
இந்த புதிய சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னோடியாக தற்போதுள்ள மதிப்பு கூட்டு வரிச்சட்டத்தின் கீழ் பதிவுப்பெற்ற 6 லட்சத்து ஆயிரம் வணிகர்களில், கடந்த ஜனவரி முதல் புதிய சரக்கு மற்றும் சேவைவரி வலைத்தளத்தில் மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட தின் பேரில், தற்போது 5 லட்சத்து 19 ஆயிரம் வணிகர்கள் (86 சதவீதம்) புதிய வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ளனர்.
இச்சட்டத்தினை அமல்படுத்த தேவையான தகவல் தொழில்நுட்பத்திற்கான வன்பொருள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதுடன், மென்பொருள் துரிதமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.
பாராளுமன்றத்தில் மத்திய சரக்கு மற்றும் சேவைவரி சட்டம், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் மற்றும் வருவாய் இழப்பு ஈடுசெய்யும் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்ட வுடன், தமிழகம் மாநில சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தினை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.