மும்பை: தற்போது நடந்துவரும் ஐபிஎல் போட்டிகளின் குரூப் நிலையிலான போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

ஐதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள், தங்களுக்குள் மோதி, இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உறுதிசெய்ய உள்ளன.

ஐதராபாத் அணியின் ரன் ரேட், அதன் உடனடி போட்டியாளரான கொல்கத்தா அணியைவிட சற்று மேம்பட்டதாகவே உள்ளது. இந்த அணி, பெங்களூரு அணியுடனான போட்டியில் வென்றால், தங்களுக்கான இடத்தை தக்க வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை, பஞ்சாப் அணியுடனான போட்டியை கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது. மேலும், இவர்கள் மும்பை அணியுடனான தங்களின் கடைசிப் போட்டியை வென்று, ஐதராபாத் அணி, பெங்களூரு அணியுடனான போட்டியில் தோற்றால், வாய்ப்பை நன்றாக உறுதிசெய்து கொள்ளலாம்.

11 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணி, வரும் போட்டியில் டெல்லி அணியை வென்றாலும்கூட, பிற அணிகளின் வெற்றி-தோல்விகளின் அடிப்படையில்தான் இதன் தலையெழுத்து அமையும் நிலை உள்ளது.

வெறும் 10 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள பஞ்சாப் அணி, கடைசி நேரத்தில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய, அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கடினம்.