சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அமையுள்ள மேம்பாலத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 900 மீட்டர் நீளமுள்ள வள்ளுவர் கோட்டம் மேம்பாலம் கட்டுவதற்காக, கிரேட்டர் சென்னை மாநகராட்சி 61.6 கோடி மதிப்பிலான நிலத்தை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் கையகப்படுத்தவுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி வள்ளுவர் கோட்டம் சிக்னலில் வாகன நெரிசலை குறைக்கும் விதமாக ரூபாய் 98 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நகராட்சித்துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார்.
இதையடுத்து, வள்ளுவர் கோட்டம் மேம்பாலம் அமைப்பதற்காக, தனியார் மற்றும் அரசு நிலங்களை கையகப்படுத்தும் வகையில், கடந்த செவ்வாய்க்கிழமை, நடைபெற்ற மாமன்ற கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி 2,883 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள தனியார் நிலங்களையும், 8,014 சதுர மீட்டர் அரசு நிலம் உள்பட மொத்தம் 10,897 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்த மாமன்ற கூட்டத்தில் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது.
இதுகுறித்து கூறிய மாநகராட்சி பாலங்கள் துறை அதிகாரிகள், இந்த பாலமானது, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள பாம்குரோவ் உணவக முனையிலிருந்து தொடங்கும் என்றும், பாலம் 14மீ அகலம் மற்றும் நான்கு வழிச்சாலை கொண்டதாக இருக்கும். வடபழனி, கோயம்பேடு மேம்பாலம் போன்று, மிகச்சிறிய வடிவமைப்பு கொண்டதாக இருக்கும் என தெரிவித்தனர்.
பாம்குரோவ் உணவகத்தில் தொடங்கி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மண்பாண்டங்கள் உள்ள பாத்திரக்கடைகளில் முடிவடையும். வடிவமைப்பு நேராகவும் எளிமையாக வும் இருக்கும். இந்த மேம்பாலம் 950 மீட்டர் நீளமும் 14 மீட்டர் அகலமும் கொண்டது. இது கட்டப்பட்டால், வள்ளுவர்கோட்டம் சந்திப்பின் நெரிசலைக் குறைக்க உதவும் என்றும், கோடம்பாக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் தடையின்றி நேரடியாக உத்தமர் காந்தி சாலையை அடையலாம். வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் அடியில் செல்லும் வாகனங்கள் சிக்னல்களில் காத்திருக்க நேரிடும், ஆனால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை என்றும், தி.நகரில் இருந்து திருமலைப்பிள்ளை சாலை வழியாக வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலையை அடைய கோடம்பாக்கம் ஹைரோட்டில் வலதுபுறம் செல்ல வேண்டும் என்பதால் போக்குவரத்து சிக்னல்கள் தொடர்ந்து இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாலம் கட்டும் பணி எப்போது தொடங்கப்படும் என்ற கேள்விக்கு பதில் அளித்த மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக வழக்கு ஏதும் இல்லை எனில் நிலம் கிடைக்க ஐந்து முதல் ஆறு மாதங்கள் ஆகலாம். நிலம் எங்கள் வசம் இல்லாமல் டெண்டர் விட விரும்பவில்லை. நிலத்தை கையகப்படுத்திய பின் பணிகள் துவங்கும் என்றவர், நிலம் கையகப்படுத்திய பின்னரே டெண்டர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.