சென்னை: சென்னை மாநகராட்சி மேயராக முதுகலை பட்டதாரியான 28வயது இளம்பெண் பிரியா பதவி ஏற்றார். அவருக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, மேயர் பிரியாவுக்கு அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன்நேரில் வாழ்த்து தெரிவித்த துடன், அவரை மேயருக்கான இருக்கையில் அமர வைத்தனர்.
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, இன்று மேயர், துணைமேயர் உள்பட நகராட்சி, பேருராட்சி தலைமைப் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று திமுக சார்பில் மேயர், துணைமேயர் பதவிக்கு போட்டியிடும் உறுப்பினர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு 28வயதான தலித் இனத்தைச் சேர்ந்த பிரியா பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அதைத்யடுத்து மேயர் பதவிக்கான தேர்தல் ஆரம்பமானது. மேயர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த பிரியா மட்டுமே போட்டியிட்டதால் அவர் போட்டியின்றி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
மேயராக தேர்வான பிரியாவுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா. சுப்பிரமணியம் உள்பட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மேயராக பதவி ஏற்ற பிரியாவுக்கு மேயருக்கான செங்கோல் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அமைச்சர்கள் அமைச்சர்கள் சேகர்பாபு, மா. சுப்பிரமணியம் ஆகியோர் அவரை அழைத்துச்சென்று மேயர் இருக்கையில் அமர வைத்தனர்.
சென்னை மாநகராட்சியின் முதல் தலித் மேயர் மட்டும் இளம் மேயர் என்ற பெருமைக்கும் பிரியா சொந்தக்காரராகி உள்ளர். மேலும், சென்னை மாநகராட்சியின் 3வது பெண் மேயர் என்ற பெருமையையும். பிரியா பெற்றுள்ளார்.
இன்று பிற்பகல் துணைமேயருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் சைதை மகேஷ்குமார் போட்டியிடுகிறார்.