ஜெயலலிதா மரணமடைந்த காலம் முதலாகவே, அதிமுகவை சமாதி அரசியல் சுழன்றடித்து வருகிறது.

தர்மயுத்தம் என்ற பெயரில், சசிகலாவை எதிர்த்து, ஜெயலலிதாவின் சமாதியில் திடீரென சென்று தியானம் இருந்தார் பன்னீர் செல்வம். இதற்குப் பின்னணியில் யார் இருந்தார்கள் என்ற கதையெல்லாம் இங்கு தேவையில்லை.

அதன்பிறகு, மத்திய அரசின் தூண்டுதலால், உச்சநீதிமன்றம் திடீரென சொத்துக் குவிப்பு வழக்கில் திடீரென தீர்ப்பு வழங்க, தான் சிறை செல்லும் முன்னதாக, ஜெயலலிதா சமாதிக்குச் சென்று சத்தியம் செய்துவிட்டே சென்றார் சசிகலா.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன்கூட, ஜெயலலிதா சமாதிக்கு வந்து தியானம் செய்த கூத்தெல்லாம் நடந்தது.

நான்காண்டுகள் சிறை தண்டனை முடிந்து, ஜனவரி 27ம் தேதி, பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகி தமிழ்நாட்டிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக தொண்டர்களின் கவனத்தை திசைதிருப்ப, கட்டி முடிக்கப்பட்ட பிரமாண்ட ஜெயலலிதா சமாதியை அன்றைய தினமே திறந்துவைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால், கொரோனா காரணமாக, தமிழ்நாட்டிற்குள் சசிகலா வருவது தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில், பிப்ரவரி 7ம் தேதி அவர் தமிழகம் வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர், சென்னை வந்தால், நேரடியாக ஜெயலலிதா சமாதிக்குத்தான் செல்வார் என்று பல்வேறான தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரில் அதிமுக கொடியுடன், சசிகலா, ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்றால், அது அதிமுக தொண்டர்களின் மத்தியில் பெரியளவில் சலசலப்பை உண்டாக்கும் என்பதை உணர்ந்த எடப்பாடி பழனிச்சாமியின் அரசு, இப்போது ஜெயலலிதாவின் சமாதியை தற்காலிகமாக மூடிவிட்டது. பொதுமக்கள் பார்வ‍ையிட அனுமதியில்லை. இதன்மூலம், தமிழ்நாடு வருகின்ற சசிகலா, ஜெயலலிதாவின் சமாதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் தமிழக அரசியலில் என்னென்ன அதிரடிகள் அரங்கேறுமோ? என்று தெரியாது. ஆனால், அதிமுகவில் ‘சமாதி’ அரசியல் இப்போதைக்கு ஓயாதுபோல் தெரிகிறது.