சென்னை: குடியரசு தினமான ஜனவரி 26ந்தேதி, தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும், அன்றைய தினம், பட்டியலின தலைவர்கள் உள்ள ஊராட்சிகளில், அவர்கள் கொடியேற்ற வேண்டும் என தமிழ்நாடு தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு உள்ளார். குடியரசு தினத்தன்று ஊராட்சிகளில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இறையன்பு அறிக்கையில், ” ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற தகவல் கிடைக்கப்பெற்றதும், இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு மற்றும் 1989ஆம்ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதிய மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) ஆகிய சட்டப் பிரிவுகளை கருத்தில் கொண்டு 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களைக் கொண்டு, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்துவதை உறுதி செய்யுமாறும்,
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும், எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்வதை உறுதி செய்யுமாறும், இது குறித்து எடுக்கப்பட்ட அறிக்கையினை அரசுக்கு அனுப்பிவைக்கவும் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொருள் தொடர்பாக பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்குரிய 15 இனங்கள் கண்டறியப்பட்டு அவற்றை களையுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும், நடந்து முடிந்த 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில், மேற்குறித்த பிரச்சினைகளுக்குரிய இனங்கள் தொடர்பாக, அவரவர் 15 மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கைகள் பெறப்பட்டு, அரசால் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மாதந்தோறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி மேற்கூறிய 15 இனங்கள் தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுத்து எவ்வித பிரச்சினைகளும் இனி வருங்காலங்களில் ஏற்படாதவாறு உரிய கிராம ஊராட்சி தலைவர்களுக்கு தக்க ஆலோசனை / பயிற்சி அளித்து எவ்வித புகார்களுமின்றி எதிர்வரும் 26.012023 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தின விழா இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், எதிர்வரும் 26.01.2023 அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும் பார்வை ஒன்றில் காணும் கடிதத்தில் அறிவுறுத்தியவாறு மேற்கூறிய 15 இனங்கள் தொடர்பாக எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களை தொடர்ந்து கண்ணியத்துடன் நடத்தும் விதமாக எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் உரிய நடவடிக்கைகள் எடுத்து உறுதி செய்யுமாறும், இது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை (உரிய ஆதார நகல்களுடன் / புகைப்படத்துடன்) அரசுக்கு உடனுக்குடன் அனுப்புவதோடு எதிர்வரும் குடியரசு தினம் அன்று கிராம சபை முடிந்தவுடன் எவ்வித பிரச்சினைகளுமின்றி நடைபெற்றுள்ளதா என்பதனை உறுதி செய்து விரிவான அறிக்கை அனுப்பவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.