தற்போது நாட்டின் பல இடங்களில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. மார்ச் 22ம் தேதியான இன்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உட்பட, மொத்தமாக நாட்டின் 75 மாவட்டங்களை மார்ச் 31வரை முடக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியா போன்ற அதிக மக்கள்தொகையும், சீனாவோடு ஒப்பிடுகையில் அதிக மக்கள் நெருக்கமும் கொண்ட நாட்டில், மக்களின் கூடுகையை தவிர்க்கும் நடவடிக்கை என்பது தேவைதான். ஆனால், இதில் வேறுபல அம்சங்களையும் கவனிக்க வேண்டியுள்ளது.
வெளிநாடுகளுக்கோ அல்லது வெளிமாநிலங்களுக்கோ வியாபார அல்லது கல்வி நிமித்தமாக சென்றுவருவோர் தற்காலிகமாக முடக்கப்பட்டால், பாதிப்புகள் பெரியளவில் இருக்கப்போவதில்லைதான்.
ஆனால், அன்றாட ஜீவனத்தை நடத்துவதற்கே, தினமும் வெளியில் சென்றுதான் ஆக வேண்டும் என்ற நிலையில், இந்தியாவில் ஏராளமான கோடி மக்கள் வாழ்கிறார்கள். எனவே, ஊரடங்கு முடக்கம் என்பது அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வையே முடக்கிப் போடுவதாகும்.
பாதிக்கப்படும் மக்களுக்காக அரசுகள் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்படுவதாய் செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், அனைத்தும் முறையாக மற்றும் விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணியாக அது இருக்கும்.
இந்த நாட்டில் வீட்டிலிருந்தே பணிசெய்யும் நிலைமையில் இருப்போர் சொற்ப சதவிகிதமே மற்றும் முடக்கத்தால் பாதிக்கப்படாதவர்களும் மிகச் சொற்பமே. ஆனால், முடக்கத்தால் தங்களின் வாழ்வையே இழக்கும் நிலையில் இருப்போர் மிக மிக அதிகம்.
எனவே, கொரோனா பரவலைத் தடுப்பதில் இந்த அரசுகள் எவ்வளவு தீவிரம் காட்டுகின்றனவோ, அதேயளவு சற்றும் குறையாத தீவிரத்தை முடக்கத்தால் பாதிக்கப்படுவோர்களைப் பாதுகாப்பதிலும் காட்டினால்தான், இந்த நாட்டின் இயக்கம் பாதுகாக்கப்படும்..!