சென்னை:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்ததாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 5 வழக்குகளில் 2 அவதூறு வழக்குகள் வாபஸ் ஆகி உள்ளது.
ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின்போது, தமிழகஅரசின் நிர்வாகம் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு கூறிய விஜயகாந்த் மீது தமிழகஅரசு 5 அவதூறு வழக்குகளை தொடர்ந்தது.
தற்போது, அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடித்து வருவதால், தேமுதிகவின் கோரிக்கையை ஏற்று அவதூறு வழக்குகளை அதிமுக அரசு வாபஸ் பெற முடிவு செய்துள்ளது.
இந்த அவதூறு வழக்குகள் மீதான விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று விஜயகாந்த்மீதான அவதூறு வழக்குகள் விசாரணைக்கு வந்தது. வழக்கை சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் விசாரணை நடத்தினார்.
அப்போது, விஜயகாந்த் மீது தொடரப்பட்டுள்ள 5 அவதூற வழக்குகளையும் திரும்ப பெற்றுக்கொள்வதற்கான அரசாணையை அரசு சிறப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி, 5 வழக்குகளில் 2 வழக்குகள் முடித்து வைக்கப்படுவதாக அறிவித்தார்.. மேலும் இரண்டு அவதூறு வழக்குகளில் பத்திரிகைகளையும் சேர்த்துள்ளீர்கள். இவர் மீதான வழக்கை மட்டும் முடித்துவிட்டு, இவர் பேசியதை வெளியிட்ட பத்திரிகைகள் மீது வழக்கு நடத்த முடியுமா என்பது குறித்த முடிவை அரசு அறிவிக்க வேண்டும், என்றும், அதுபோல 2016ம் ஆண்டு தொடர்ந்த அவதூறு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதுகுறித்தும் தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.