சென்னை:
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், தற்போது, தட்டச்சர் (டைப்பிஸ்டு) தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ள தகவல் அம்பலமாகி உள்ளது.
ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பாக பெண் ஊழியர் உள்பட 3 பேரிடம் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நடைபெற்றுள்ள தேர்வுகளில்பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது அம்பலமாகி உள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புதுத்தகவல்கள் வெளியாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தட்டச்சர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அரசு தேர்வுத்துறையில் உள்ள தொழில் நுட்ப துறையில் சமீபத்தில் வேலைக்கு சேர்ந்தவர் மரகதம். இவருக்கு தட்டச்சு செய்ய தெரியாத நிலையில், அவர் தட்டச்சர் தேர்வில் எப்படி தேர்ச்சி பெற்றார்? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், மரகதம் ஆள் மாறாட்டம் செய்து தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றது தெரியவந்தது.
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை உதவி இயக்குநர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. புகாரின் பேரில் பெண் ஊழியர் மரகதம் மற்றும் விக்னேஷ், இன்ஸ்டிடியூட் உரிமையாளர் நாதன் ஆகிய 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் சம்பந்தப்பட்ட இன்ஸ்டிடியூட்டில் இதுவரை படித்தவர்கள், சான்றிதழ் பெற்றவர்கள் விவரமும் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தட்டச்சர் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததும் மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவைகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், தற்போது அரசு நடத்திய தட்டச்சர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.