டில்லி

க்களின் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனம் குறித்த விவரங்களை தனியார் நிறுவனங்களுக்கு அரசு ரூ. 65 கோடிக்கு விற்பனை செய்துள்ளது.

மக்களின் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு ஆகியவைகளில் பல நுண்ணிய விவரங்கள் அடங்கி உள்ளன. இவற்றை ரகசியமாக அதன் உரிமையாளர்கள் பாதுகாத்து வருகின்றனர். தற்போது ஒவ்வொரு ஆவணமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக உள்ளதால் ஒரு ஆவணம் குறித்த விவரங்களைக் கொண்டு மற்ற விவரங்களையும் அறிந்துக் கொள்ள முடியும் என மின்னணு நிபுணர்கள் கூறி வருகின்றனர்..

இவ்வாறு குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களை பெறும் நிறுவனங்கள் அதை மற்ற நிறுவனங்களுக்கு விற்று பணம் சம்பாதிக்கின்றன. இவ்வாறு வாங்கப்படும் விவரங்க்ள் மூலம் நமது தொலைபேசி எண் பலருக்கும் பகிரப்பட்டு அதனால் நமக்கு பல விளம்பர அழைப்புக்கள் வருவதை நாம் அறிவோம். ஆனால் அதே நேரத்தில் இந்த தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஆதார், வங்கிக் கணக்கு உள்ளிட்ட பல விவரங்களையும் இந்த தனியார் நிறுவனங்கள் கையாள முடியும் என கூறப்படுகிறது.

நேற்று முன் தினம் மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு சாலைப் போக்குவரத்து துறை  அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து வடிவில் ஒரு பதில் அளித்தார். அந்த பதிலில், “சாலை போக்குவரத்து துறையில் உள்ள அனைத்து விவரங்களும் பலவித ஆய்வுகளுக்கு பயன்படுகின்றன. இந்த ஆய்வுக்காக தனியார் நிறுவனங்கள் இந்த துறைக்கு வருடத்துக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு விவரங்களை விற்பனை செய்வது அரசுக்கு லாபத்தை அளிக்கிறது.

அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை தன்னிடம் உள்ள ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு விவரங்களை இதுவரை பல தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்த வருடம் மட்டும் அரசு ரூ. 3 கோடி வருமானம் ஈட்டி உள்ளது. இதுவரை இவ்வாறு விவரங்களை விற்றதில் அரசுக்கு ரு.65 கோஒடி வருமானம் கிடைத்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இந்த விவரங்கள் கிடைப்பதால் தனியார் நிறுவனங்கள் எவ்வித பயனும் அடையாது எனவும் ஆய்வுக்கு மட்டுமே பயன்படும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் ஆய்வுக்காக கோடிக்கணக்கில் பணம் கொடுத்து இந்த விவரங்களை தனியார் நிறுவனம் வாங்கும் என்பதை பலரும் நம்ப மறுக்கின்றனர். மேலும் அரசு தன்னிடம் உள்ள விவரங்களை பத்திரமாக பாதுகாப்பதற்கு பதில் விற்பனை செய்வது மிகவும் அவலமானது என ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.