டில்லி

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த அரசு தங்கள் கட்சிக்கு வாக்களிக்காத மக்களுக்கும் நன்மை புரிய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 40%க்கும் அதிகமாக வாக்குப் பெற்றுள்ளது.    மேலும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது.   பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.  சமீபத்தில் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றி உள்ளார்.

பிரணாப் முகர்ஜி தனது உரையில், “மக்களவை தேர்தல்களில் பாதிக்கும் குறைவான வாக்குகள் பெற்றுள்ள கட்சிகள் பெரும்பான்மை பெற்றதாக அறிவிக்கப்படுகின்றன.  மக்களில் பாதிக்கும் குறைவானவர்களே வெற்றி பெற்ற கட்சிக்கு வாக்களித்து வருகின்றனர்.   இவ்வாறு முன்பும் நடந்துள்ளது.  இப்போதும் நடைபெறுகிறது.

இந்த நிலை காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக உள்ளிட்ட பல கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.  இதன் மூலம் வாக்காளர்கள் அரசு அமைக்க போதுமான பெரும்பான்மையை அளித்துள்ளனர்.  அதே நேரத்தில் ஆட்சியாளர்களுக்கு வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் முழு  பெறும்பானமை அளிக்கவில்லை என்பதே உண்மை ஆகும்.

இதற்கு  பொருள் என்னவென்றால் தங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் அரசு நன்மை செய்ய வேண்டும் என்பதே ஆகும்.  ஏனென்றால் வாக்களிக்காத மக்களும் நமது குடியரசின் மக்கலே என்பதை மறக்காமல் அரசு அனைவருக்கும்  நன்மை செய்ய வேண்டும்” எனக் கூறி உள்ளார்.