புதுடெல்லி:

பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் மயமாக்கி வருகிறது மத்திய அரசு. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும் அழித்து வருகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசைச் சாடியுள்ளார்.

இந்தியாவின் 2-வது பெரிய எரிபொருள் சில்லரை விற்பனை நிறுவனமும், 3-வது பெரிய சுத்திகரிப்பு நிறுவனமுமான பிபிசிஎல் நிறுவனத்தில் தனக்கிருக்கும் 52.98 சதவீத பங்குகள் அனைத்தையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிராக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், “ இன்று , இந்த நாடு மோடி அரசால் உருவாக்கப்பட்ட பல்வேறு பேரழிவுகளைச் சந்தித்து வருகிறது. இதில் தேவையில்லாத இந்த தனியார்மயமாக்கலும் ஒன்று. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை. ஆனால், மோடி அரசு வேலைவாய்ப்பை அழித்து வருகிறது, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது.

இந்தத் தனியார் மயமாக்கலால் யார் பயன்பெறுவது. மோடிக்கு நெருக்கமாக இருக்கும் சில நண்பர்கள் மட்டுமே இதனால் பயன் அடைவார்கள். தனியாமர் மயமாக்கலை நிறுத்துங்கள், அரசு வேலைவாய்ப்பை பாதுகாப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் “ அரசியல்ரீதியாக தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், பொருளாதாரா ரீதியாக திவாலான அரசு என்று மோடி அரசு தன்னைத்தானே நிரூபித்துள்ளது.

சீனா 3.8 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது, ஆனால், இந்தியா 23.9 சதவீதம் பொருளாதார வீழ்ச்சி கண்டுள்ளது. மோடியின் பொருளாதாரம் தோல்வி அடைந்துள்ளது,

வார்த்தை ஜாலத்தால் பொருளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்ய முடியாது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பிரதமர் மோடி பேசி, பொருளதாரப் பிரச்சினைகளுக்கு அவரிடம் ஆலோசனைகளை அமைதியாகக் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது:

“ பொருளாதார நடவடிக்கையில் ஒரு பகுதியாக ஸ்டேட் வங்கி விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்தப்போவதாக செய்திகள் வந்தன. சாதாரண காலங்களில் இந்தத் திட்டம் விவாதத்திற்குரியதாக இருக்கும். பொருளாதாரம் சரிந்து, வேலைகள் பற்றாக்குறையாக இருக்கும் இப்போதுள்ள அசாதாரண காலங்களில், இந்த திட்டம் கொடூரமானது.

இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான ஸ்டேட் வங்கியே வேலையாட்களை குறைக்க முடிவெடுத்தால், மற்ற பெரிய நிறுவன முதலாளிகள் மற்றும் நடுத்தர, சிறு, குறு நிறுவனங்கள் என்ன செய்வார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.

இந்த திட்டம் வெளிப்படையாக விருப்பத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கலாம் என்று கூறப்பட்டாலும், வங்கியால் அனுபப்பட இருக்கும் ஊழியர்களுக்கு நுட்பமான அழுத்தம் இந்த அறிவிப்பு மூலம் கொண்டு வரப்படும் என்பதை நாங்கள் அறிவோம்.

தற்போதைய விதிகள் உண்மையான விருப்ப ஓய்வை வழங்கினாலும், ஏன் ஒரு புதிய திட்டத்தை அறிவித்து 30,190 பேர் விருப்ப ஓய்வில் செல்லப்போகிறார்கள் எனும் சரியான எண்ணை கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.