சென்னை

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளை இயங்க அனுமதி அளித்து அரசு அறிக்கை விடவேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கேட்டுக்  கொண்டுள்ளார்.

சென்னையில் கடுமையாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக அனைத்து தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.   இதனால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தும் இயங்காமல் உள்ளன.  இதையொட்டி இன்று மதிமுக பொதுச் செயலர் வைகோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் வைகோ, “சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்ளே ஆசியாவின் மிகப்பெரிய அம்பத்தூர் தொழிற்பேட்டை வருவதால், அங்கே உள்ள நிறுவனங்கள் தொழிலைத் தொடங்க முடியவில்லை. இங்கிருந்து தான், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை உருவாக்கித் தருகிறார்கள்.

இங்கு உற்பத்தி நின்றதால் பெரும் தொழில் நிறுவனங்கள் இயங்க முடியவில்லை,  இதனால் ஒரு சிலர் இவர்களுக்குக் கொடுத்து இருக்கிற உதிரிப் பாகங்கள் கொள்முதல் வேறு நிறுவனங்களுக்கு மாற்றி வருகிறார்கள்.  இதைப் போல் மற்றவர்களும், மாற்றி விடக் கூடும்.  ஆகவே, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.

ஆகையால் இதை மனதில் கொண்டு, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்கள், திங்கட்கிழமை முதல் இயங்குவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.