சென்னை:

பத்திரிகையாளர்களுக்கு கொரோனா சிறப்பு பரிசோதனை முகாமை அரசு நடத்த வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தி உள்ளது.

சென்னையைச் சேர்ந்த இரு பத்திரிகையாளர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இக்கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சென்னை பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரிகையாளர்களுக்கு கொரோனா சிறப்பு பரிசோதனை முகாமை அரசு நடத்த வேண்டும். மேலும் தமிழக அரசும், அரசியல் கட்சியினரும் நேரடியான செய்தியாளர் சந்திப்பை தவிர்க்க வேண்டும். ஊடக நிறுவனங்களும் இது தொடர்பாக உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டால் மொத்த செலவையும் அரசே ஏற்கும்.மேலும் அவர்கள் கொரோனாவால் உயிரிழந்தால் 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும்” எனவும் சில தினங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.