டெல்லி: பருப்பு வகைகள் விலையேற்றத்தை தடுக்கும் வகையில், பருப்பு வகைகளை இருப்பு வைக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து முடக்கம் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக, நாடு முழுவதும் உணவு தாணியங்கள் விலை உயர்ந்து வருகின்றன. உணவுக்கு தேவையான பருப்பு வகைகள் இரு மடங்கு விலை உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது.

இந்த நிலையில், உணவுப்பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க மத்தியஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடா்பாக மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில், பருப்பு விலை மேலும் உயர்வதை கட்டுப்படுத்தவும், பதுக்கலை தடுக்கவும் வரும் அக்டோபர் மாதம் வரை பாசிப்பருப்பு தவிர மற்ற அனைத்து வகை பருப்புகளையும் இருப்பு வைக்க தடை விதித்துள்ளது.
இதன்படி, மொத்த விற்பனையாளா்கள் எந்த குறிப்பிட்ட ஒரு பருப்பு வகையையும் 200 டன்களுக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது. சில்லறை விற்பனையாளா் எந்த பருப்பையும் 5 டன்னுக்கு மேல் இருப்பு வைத்திருக்கக் கூடாது. ஆலை உரிமையாளர்கள் கடந்த 3 மாத உற்பத்தி அல்லது ஆண்டு உற்பத்தியில் 25 சதவீதத்திற்கு மேல் இருப்பு வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இறக்குமதியாளா்களைப் பொருத்தவரையில் அவா்களும் 200 டன்களுக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது. மே 15-ஆம் தேதிக்கு பிறகு இறக்குமதி செய்யப்பட்ட பருப்புகளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தும்.
குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு மேல் பருப்பு வகைகளை இருப்பு வைத்திருந்தால் அதனை நுகா்வோா் விவகாரத் துறை இணையதளத்தில் பதிவு செய்து இருப்பு விவரத்தை அரசின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும். அதில் இருந்து 30 நாள்களில் நிா்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருப்பைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]