சென்னை:
காட்டுயானையான சின்னதம்பி யானையைக் கும்கியாக மாற்றும் எண்ணமில்லை எனத் தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது.
சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருந்த நிலையில், அதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
காட்டுயானையான சின்னதம்பி, கோவை அருகே உள்ள சின்ன தடாகம் என்ற பகுதியில், கடந்த 28-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, டாப்சிலிப்பில் கொண்டு விடப்பட்டது. ஆனால், சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்த சின்னதம்பி மீண்டும் ஊருக்குள் ஊடுருவி உலா வந்து கொண்டிருக்கிறது. சின்னத்தம்பியின் அட்டகாசம் பெருகிவிட்டால் அதை, கும்கியாக மாற்ற போவதாக தமிழக வனத்துறை அறிவித்திருந்தது.
ஆனால், இதற்கு பொதுமக்கள் மற்றும் வன ஆர்வலர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சின்னதம்பிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும் சேவ் சின்னத்தம்பி என்று ஹேஸ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது.
இந்த நிலையில் விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசாத் என்பவர், இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார். அவர் தாக்கல் செய்த மனுவில்,யானைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்வது பற்றி விதிகளை வகுக்க வேண்டும் என்று அருண் பிரசாத் தனது மனுவில் முக்கிய கோரிக்கையாக விடுத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் இன்று மாலை விசார ணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், சின்னதம்பி யானையைக் கும்கியாக மாற்றும் திட்டம் ஏதும் இல்லை எனத் தெரிவித்தார். யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுவதாகவும், யானையைக் கும்கியாக மாற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, இதுகுறித்து தமிழக அரசு விரிவாக பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.