கோஹினூர் – என்றால் மலையளவு ஒளிவீச்சு என்று பொருள். இந்த விலைமதிப்பில்லா வைரத்திற்கு கோஹினூர் என்று பெயரிட்டவர் நாதிர்ஷா எனும் ஒரு பாரசீக மன்னன். 15 ம் நூற்றாண்டுகளிலேயே இந்த வைரத்தின் மதிப்பு கேட்டால் பிரமிப்பூட்டுவதாக இருந்திருக்கிறது. கோஹினூர் வைரத்தை விலை கொடுத்து வாங்கும் பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் இரண்டரை நாட்கள் உணவளிக்க முடியும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
kohinoor 0
கடந்த 2015 ஆம் ஆண்டு, பிரிட்டனில் உள்ள, ஆக்ஸ்போர்டு ஒன்றிய சங்கத்தில், காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் உரையாற்றியபோது, ‘விலை மதிப்பில்லாத கோஹினுார் வைரத்தை, இந்தியாவில் இருந்து கொள்ளையடித்து சென்று, 200 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருக்கும் பிரிட்டன் அரசு, அந்த வைரத்துடன், தகுந்த இழப்பீடும் வழங்க வேண்டும்’ என்றார்.
இதையடுத்து,  2015 செப்டம்பர் மாதம் 15 தேதி ,பிரிட்டனின் தொழிலாளர் கட்சி எம்.பி.,யும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கீத் வாஜ், நேற்று, வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கோஹினுார் வைரத்தை இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இதுகுறித்து தீவிரமாக பிரசாரம் செய்யப்படும். நவம்பரில் பிரிட்டன் வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோஹினுார் வைரம் அளிக்கப் படவேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அனைத்து இந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி முன்னணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. கோஹினூர் வைரம் உள்ளிட்ட இந்தியாவில் எடுக்கப்பட்ட பொக்கிஷங்களை இந்தியாவிடமே ஒப்படைக்க இங்கிலாந்து தூதரகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு இருந்தது. வழக்கில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசமும் இணைக்கப்பட்டது.  இதுதொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு 6 வாரங்கள் கால அவகாசத்தை உச்ச நீதிமன்றம்  தந்தது .
இந்நிலையில் ”மத்திய கலாசார அமைச்சகத்தின் நிலைபாட்டின்படி,  “இந்தியா கோஹினூர் வைரத்தை திரும்ப கோராது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வைரம் திருடப்படவும் இல்லை, வலுக்கட்டாயமாக பறிக்கப்படவும் இல்லை. கி.பி. 1849-ல், கிழக்கு இந்திய கம்பெனியிடம்  மகாராஜா ரஞ்சித் சிங்கால் கோஹினூர் வைரம் பரிசாக வழங்கப்பட்டது ” என்று அரசுத் தரப்பு  பதில் அளித்துள்ளது. இவ்வழக்கில் அங்கம் வகிக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இவ்விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க உள்ளது.

கோஹினூர் வைரத்தின் வரலாறு அறிய இங்கே சொடுக்கவும் .