சென்னை
அரிய வகை நோயைக் குணப்படுத்த ஆயுஷ் என்னும் பல வகை மருத்துவர் குழு அமைக்க உள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எல் எஸ் டி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு வகை அரிய நோயை ஆங்கிலத்தில் லைசோசோமால் ஸ்டோரேஜ் டிஸ்ஆர்டர் என கூறப்படுகிறது. இந்த நோய் 8000 பேரில் ஒருவருக்கு வர வாய்ப்புள்ளது. இதற்கு தற்போதுள்ள ஆங்கில மருத்துவச் சிகிச்சைக்கு மாதத்துக்கு ஒருவருக்கு ரூ.4 லட்சம் வரை செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நோய் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் அரசு வழக்கறிஞர் விஜய் நாராயண தற்போது மாநிலம் முழுவதும் சுமார் 130 நோயாளிகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் இந்த நோய் உயிர் அபாயம் உள்ள நோய் என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் இந்த நோய்க்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்க போதுமான நிதி நிலை இல்லாதஹ்டால் இந்த நோயை குணப்படுத்த அரசு ஒரு குழுவை அமைக்க உள்ளதாகக் கூறி உள்ளார். ஆயுஷ் என்னும் ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவர்கள் அடங்கிய இந்தக் குழு விரைவில் இதற்கான சிகிச்சை முறைகளைக் கண்டறியும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.