ஒழிக்கப்பட வேண்டிய அதிகாரங்களும் ஆளுநர் பதவிகளும்..
நெட்டிசன்
ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
புயல் வெள்ளம் போன்ற நெருக்கடி காலங்களில் இடர்பாடுகளை களைய இரவு பகல் என பாராமல் மக்களிடம் நேரடியாகச் சென்று பாடுபடுபவர்கள் அரசியல்வாதிகளே.
தேர்தல் ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களில் பெரும்பாலானோர் இயற்கை பேரிடர் மற்றும் பெரும் விபத்து போன்ற சந்தர்ப்பங்களில் மக்களை சந்திக்க தவறுவதே இல்லை.
இப்போது கூட பாருங்கள். சென்னை பெருவெள்ளத்தில் அமைச்சர்கள் முதலமைச்சர் உட்பட அத்தனை பேரும் கடந்த சில நாட்களாக கொட்டும் மழையில் மக்கள் மத்தியில் உலவுகின்றனர். சேறும் சகதியிலும் சென்று மக்கள் குறைகளை கேட்டு உதவி செய்வதற்காக உத்தரவுகளையும் பிறப்பித்தனர்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களிலும் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் மக்கள் பிரதிநிதிகள்தான் முதன்முதலில் ஓடுகின்றனர். ஆனால் கொடுமை என்னவென்றால், எங்கேயோ இருந்து வந்த ஒருவர் நோகாமல் ராஜ்பவனில் கவர்னர் என்று அமர்ந்துகொண்டு பக்கோடா, சமோசா சாப்பிட்டுக் கொண்டு முதலமைச்சரை அழைத்து விளக்கம் கேட்பார். அவருக்கு முதலமைச்சர் பதில் சொல்லியாக வேண்டும்.
அதாவது மக்களிடம் செல்லாதவர், மக்களுடன் தொடர்பே இல்லாத ஒரு யோக்கிய சிகாமணிக்கு ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் கைகட்டி பதில் சொல்ல வேண்டும்.
இதைவிட கொடுமை, இலட்சோப லட்சம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வர் முக்கிய அரசு அரசாணைகளை அவர் பெயரால் பிறப்பிக்க முடியாது. வெட்டி பகோடா கவர்னரின் பெயரில்தான் பிறப்பிக்க முடியும்..
அரசியல் சாசன சட்டம் மக்கள் பிரதிநிதிகளை எவ்வளவு எவ்வளவு தூரம் கேவலப்படுத்துகிறது பாருங்கள்.
அதனால் தான் காலம் காலமாக சொல்லி வருகிறோம்..
தேர்தல் முடிந்து ஆட்சியமைக்கும் விவகாரம் போன்ற அரசியல் நெருக்கடி காலத்தில் மட்டும் ஜனாதிபதியோ துணை ஜனாதிபதியோ மாநிலத்திற்கு வந்து கடமையாற்றி விட்டுச் சென்றால் போதும்..
முதலமைச்சருக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்து விட்டு மற்ற நேரங்களில் என்ன செய்வதென்றே தெரியாமல் வெட்டியாய் உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த மாநில ஆளுநர்களின் பதவி இனியாவது ஒழிக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் முதலமைச்சர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் சுயமரியாதையை, மாநிலத்தின் தன்மானத்தை காப்பாற்றிக்கொள்ள இதற்கான மணியை கட்ட வேண்டும்.