நாளை பிற்பகல் 1:30க்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும் படி கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு, அம்மாநில ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் தேவை என்று சித்தராமய்யா கோரியிருந்த நிலையில், ஆளுநர் இவ்வாறு முதல்வரை வலியுறுத்தியுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமியை நாளை பிற்பகல் 1:30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும் படி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வருக்கு, ஆளுநர் எழுதியுள்ள கடிதத்தில், “நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்கிற தீர்மானத்தை முன்மொழிந்து, சட்டப்பேரவையில் அதை கொண்டுவருகிறீர்கள் என்கிற நிலையில் அதில் நான் தலையிடவில்லை. ஆனால் எனக்கு கொடுக்கப்பட்ட தகவலின் படி, நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படாமல், அவை அமளியில் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டதோடு, நம்பிக்கை தீர்மானம் கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. சட்ட விதிகளின் படி அவ்வாறு ஒத்திவைக்க முடியாது.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தான் நீங்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றீர்கள். கர்நாடக சட்டப்பேரவையின் பலம் 224. இதில் காங்கிரஸ் கட்சி 79 உறுப்பினர்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 உறுப்பினர்களையும், கர்நாடக பிரக்யாவந்த்யா கட்சியை சேர்ந்த உறுப்பினரும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினரும், சுயேட்சை ஒருவரும் என மொத்தம் 119 உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். பாஜகவுக்கு 105 உறுப்பினர்கள் உள்ளனர்.

சமீபத்தில் காங்கிரஸை சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் என்னை நேரில் சந்தித்து, தங்களின் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளதாக கூறினார்கள். 15 உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்து, உச்சநீதிமன்றத்தை இதற்காக நாடியுள்ளார்கள். ஏற்கனவே கர்நாடக பிரக்யாவந்த்யா கட்சி உறுப்பினர் ஒருவரும், சுயேட்சை ஒருவரும் உங்களுக்கான ஆதரவை திரும்ப பெற்றுவிட்டார்கள். இந்த விபரங்களை எல்லாம் வைத்து பார்க்கும்போது, உங்களுக்கு ஆதரவு அளித்த மீதம் உள்ள 117 உறுப்பினர்களில், கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதோ என்று தோன்றும் அளவுக்கு தான் எண்ணத்தோன்றுகிறது. இதனால் தான் நீங்கள் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவந்தீர்களோ என்று கூட சந்தேகம் எழுகின்றனது” என்று தெரிவித்துள்ளார்.

மாலையில் தங்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கோரி சித்தராமையா பேசிய நிலையில், ஆளுநர் இவ்வாறு அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.