சென்னை: மாநில ஆளுநரின் வேலையே, மாநில அரசு நிறைவேற்றி தரும் மசோதாக்களை, குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய பணிதான். இந்த போஸ்ட் மேன் வேலையை கூட ஓழுங்காக செய்யாமல் இருப்பது ஆளுநருக்கு அழகல்ல என தல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.

நீட் அநீதியை விளக்கி 21 நாட்கள் தமிழ்நாடு முழுக்க பரப்புரை மேற்கொண்ட விடுதலை ஆசிரியர் கி.வீரமணியின்  பெரும்பயணத்தின் நிறைவு சிறப்புப் பொதுக் கூட்டம் நேற்று வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டலின் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், இன்றைக்கு தமிழ்நாட்டில் அமைந்துள்ள திராவிட மாடல் ஆட்சியை எந்த சூழலிலும், வழி நடத்தி செல்வேன். இது இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக அமையக்கூடிய ஒரு ஆட்சி. கருப்பையும் சிவப்பையும், யாராலும் பிரிக்க முடியாது. தமிழினம் முன்னேறுவது சிலருக்கு பிடிக்க வில்லை, அதனால் தான் நம்மை எதிர்க்கிறார்கள்; பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு இதனால் தான் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. பெரியார் போல எந்த தலைவரும் எந்த இனத்திற்கும் கிடைத்ததில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த நுழைவுத்தேர்வு எந்த வகையிலும் நுழைய கூடாது என்பதே நமது கொள்கை. .மக்கள் மன்றத்தில் நீட் தீமைகளைத் தொடர்ந்து எடுத்துரைப்போம். இந்தப் போராட்டத்தில் நிச்சயம் வெல்வோம். ஆளுநரிடம் நம் கேட்பது ஒப்புதல் இல்லை, முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க கேட்கிறோம். 8 கோடி மக்களின் கோரிக்கையான நீட் விலக்கு  முன்வடிவுகளை குடியரசு தலைவருக்கு அனுப்பும் போஸ்ட் மேன் வேலையை கூட ஆளுநர் செய்ய மறுப்பது அவருடைய பதவிக்கு இது அழகல்ல.

இவ்வாறு முதல்வர் காட்டமாக விமர்சித்துள்ளார்.