எடப்பாடியை கவர்னரும் மதிக்கலையே..!:  எழுத்தாளர் பி.கே.பி.

Must read

நெட்டிசன்:

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukkottai Prabakar Pkp) அவர்களின் முகநூல் பதிவு:

ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக ஆவதற்கும் முன்பே போயஸ் தோட்டத்திற்கு பல அமைப்பினர், பிரமுகர்கள், அதிகாரிகள் என்று பூங்கொத்துக்கள் வாங்கிக்கொண்டு இன்றைய சிறைப் பறவையை நோக்கி படையெடுத்தார்கள். (அல்லது வற்புருத்தலின் பேரில் வந்தார்கள்)

எடப்பாடி பழனிச்சாமி – வித்யாசாகர்

இப்போது..செல்லுமோ, செல்லாதோ.. இன்றைய தேதிக்கு அதிகாரப்பூர்வமாக முதலமைச்சராக இருப்பவரை நோக்கி பூச்செண்டுகள் ஏன் போகவில்லை? கவர்னரும், திருமதி கவர்னரும்கூட பதவியேற்பு விழாவின்போது அவர்களுக்கு இவர் வழங்கிய அதேப் பூச்செண்டுகளையே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். (கவர்னர் தரப்பிலிருந்து வேறு பூச்செண்டுகள் தருவதே மரபு என்கிறார்கள்.) இதிலிருந்தே உங்கள் வெற்றியை உங்களைத் தவிர வேறு யாரும் கொணடாடத் தயாராக இல்லை என்று புரியவில்லையா?

கோவைக்கு திரும்பிய எம்.எல்.ஏவும், மைலாப்பூர் எம்.எல்.ஏ நடராஜ் அவர்களும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவெடுத்ததாகச் சொல்கிறார்கள். பல ஊர்களில் தொகுதி பக்கம் வராதீர்கள் என்று ஃப்ளெக்ஸ் வைத்துவிட்டார்கள். ஒரு ஊரில் கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டரே ஒட்டியிருக்கிறாகள். ஆனாலும் இன்றுவரை மக்கள் விருப்பம்தான் இது என்று பிடிவாதமாக சொல்லி வரும் செங்கோட்டையன் போன்றவர்களிடம் சில கேள்விகள்:

பி.கே.பி. பதிவு

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இணக்கம் இருந்தாலுமே பல பிரச்சினைகளை தமிழகம் சாதிக்க முடியாமல் தவிக்கும்போது..வெங்கைய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை போன்ற மூத்த பா.ஜ.க தலைவர்களே உங்கள் அரசை விரும்பவில்லையே.. உங்களால் என்ன சாதித்துவிட முடியும்?

அதுசரி.. மாநிலத்திற்கும், மக்களுக்கும் நன்மை செய்வதற்காகவா நீங்கள் பதவிகளுக்கு ஆசைப்பட்டீர்கள்? ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்டுவோம், சட்டசபையில் படம் திறப்போம், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவோம்..இதைத்தானே லட்சியமாக சொன்னீர்கள்? (இதையெல்லாம் கட்சி செலவிலேயே செய்ய இயலுமே..)

பி.கே.பி.

உச்சநீதி மன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த பிறகும்..அம்மாவின் நல்லாட்சியை வழங்குவோம் என்பதும், சின்னம்மாவின் வழி காட்டலின்படி நடப்போம் என்பதும்..மகா அபத்தமாக இல்லையா? இனி நாங்கள் நல்லாட்சி வழங்குவோம் என்று ஒரு பேச்சுக்காவது சொல்லுங்களேன். சிறையில் குற்றவாளியாக தண்டனை பெற்று வரும் ஒருவரின் சபதம் வென்றதாக குதூகலிக்கும் நீங்கள் அவரின் உத்தரவுகளை செய்ல்படுத்தும் ஒரு பொம்மை முதல்வராகத்தானே இயங்கப் போகிறீர்கள்? இதில் உங்களுக்கோ அரசுக்கோ என்ன பெருமை இருக்கிறது?

கடைசியாக நீதித் துறைக்கு ஒரு விண்ணப்பம்: சட்டமன்றத்தின் சபாநாயகர் என்பவர் நியாயம் வழங்கும் நீதிபதிக்கு சமமானவர் என்பதால் அந்த இடத்திற்கு எந்தக் கட்சியையும் சேராத ஒரு ஓயுவு பெற்ற நீதிபதியைத்தான் நியமிக்க வேண்டும் என்று சட்டத் திருத்தம் எதுவும் கொண்டுவர வாய்ப்பிருந்தால் அதைச் செய்யுங்கள் முதலில்..

 

More articles

Latest article