சென்னை

ன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இன்று நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  கொரோனா எச்சரிக்கை காரணமாக பொது இடங்களில் சிலை வைத்து வழிபடுவது மற்றும் ஊர்வலமாக எடுத்துச் சென்று சிலைகளைக் கரைப்பது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.    இன்றைய விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ஆளுநர் மற்றும் பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: விநாயகர் பிறந்த நாளான இந்நன்னாள், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமும் மகிழ்ச்சியையும் சகிப்புத்தன்மையையும் எடுத்து செல்லும் நாளாகும். கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ளும் ஆற்றலை நம் அனைவருக்கும் விநாயகர் அருள்வார். தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி, வளமை, அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்தைக் கொண்டுவருவதாக விநாயக சதுர்த்தி அமையட்டும்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: விநாயகர் சதுர்த்தி, பொதுமக்களுக்குப் பாதுகாப்பை தருவதாகவும், அதேசமயம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவும், வருங்கால முன்னேற்றத்துக்கு வித்திடுவதாகவும் அமையட்டும். கரோனா எனும் சவாலான சூழ்நிலையை தடுப்பூசி கொண்டு எதிர்க்கும் மன உறுதி கொண்டு இந்த விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி: ஞானமே வடிவான திருமேனியைக் கொண்ட விநாயகப் பெருமானின் திருவருளால் உலகெங்கும் அன்பும், அமைதியும் நிறையட்டும், நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும். வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும். அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: இந்த நன்னாளில் விநாயகரின் அருளால் அனைவருக்கும் துன்பங்கள் அகன்று வளமும் நலமும் பெருகட்டும். அமைதியும் அன்பும் உலகில் தழைத்தோங்கட்டும்.

சமக தலைவர் சரத்குமார்: உலகெங்கும் விநாயகர் சதுர்த்தியைச் சிறப்பாக கொண்டாடும் சகோதர, சகோதரிகளுக்கு விநாயக சதுர்த்தி தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமாகா தலைவர் ஜி.கேவாசன்: அனைவரும் இவ்விழாவைப் பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும். இந்நன்னாளில் அனைவரின் இல்லத்திலும் விநாயக பெருமானின் அருள் நிறையட்டும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.